×

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வாகன பேரணி

ஈரோடு, ஜன.27: வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் வாகன பேரணி நடந்தது. தி.மு.க. உயர்நிலை திட்ட குழு உறுப்பினரும், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், பல்லடம் நகர பொறுப்பாளர் ந.ராஜேந்திரகுமார் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நா.சோமசுந்தரம் பல்லடம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பல்லடம் அரசினர் மேல்நிலை பள்ளி முதல் என்.ஜி.ஆர் சாலை அண்ணா சிலை வரை டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இப்பேரணியில், அனைத்து விவசாய சங்கங்கள், அனைத்து தோழமை நிர்வாகிகள், மாநில, மாவட்ட அமைப்பாளர்கள், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள், நகர வார்டு பொறுப்பாளர்கள், நகர வார்டு பொறுப்புக்குழு உறுப்பினர்கள், அனைத்து சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல் வீரர்கள், தோழமை கட்சி உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பவானி: டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பவானியில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் பைக் பேரணி நேற்று நடைபெற்றது. பவானி புதிய பஸ் நிலையத்தில் தொடங்கிய பேரணிக்கு தி.மு.க. நகரச் செயலாளர் ப.சீ.நாகராஜன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, காங்கிரஸ் நகரத் தலைவர் கதிர்வேல், ம.தி.மு.க. நகரச் செயலாளர் அறிவழகன் முன்னிலை வகித்தனர். தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியம், மாவட்ட பிரதிநிதி ராஜசேகர், நகர அவைத்தலைவர் மாணிக்கராஜ், இந்திய கம்யூ. நகரச் செயலாளர் பாலமுருகன், மாவட்ட குழு உறுப்பினர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூ., ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், விவசாயத் தொழிலாளர் சங்க வட்டார  செயலாளர் எஸ்.மாணிக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றிய செயலாளர் நாகராஜ், கொ.ம.தே.க. நகரச் செயலாளர் ஸ்ரீகுமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றியச் செயலாளர் நாகராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் சுந்தர்ராஜன், மாவட்ட பொறுப்பாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்ப வேண்டும் என வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. பெருந்துறை: பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தேசியக்கொடிகளுடன் இருசக்கர வாகன பேரணி புறப்பட்டு பழைய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, காவல்நிலையம், ஈரோடு ரோடு, பங்களா வீதி, தபால் நிலையம், அண்ணா சிலை, நால்ரோடு, பவானி மெயின் ரோடு வழியாக மீண்டும் புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது. அங்கு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர்  துளசிமணி தலைமையில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் தி.மு.க. பெருந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி, சி.பி.ஐ. ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.திருநாவுக்கரசு, சி.பி.எம். பெருந்துறை தாலுகா செயலாளர் கே.குப்புசாமி, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வி.எம்.கந்தசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி, சி.ஐ.டி.யு. சார்பில் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

சென்னிமலை: சென்னிமலையில் நேற்று விவசாயிகள் இருசக்கர வாகனங்களில் கிராமப்புறங்கள் வழியாக ஊர்வலம் செல்ல முடிவு செய்தனர். காலை 10 மணி முதல் சென்னிமலை-காங்கயம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதி அருகே தேசிய கொடிகளுடன் விவசாயிகள் மற்றும் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் கிராமப்புறங்கள் வழியாக இருசக்கர வாகன ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்தனர். இதனால், விவசாயிகள் தமிழக அரசையும், போலீசாரையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர்கள் (பொறுப்பு) சண்முகசுந்தரம், சண்முகம் ஆகியோர் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, தேசிய கொடிகளுடன் இருசக்கர வாகனங்களில் விவசாயிகள் பஸ் நிலையம் வழியாக குமரன் சதுக்கம் சென்று அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் பஸ் நிலையத்தை அடைந்தனர்.
இதில், சென்னிமலை ஊராட்சி தலைவர் காயத்ரி இளங்கோ, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செல்வம், பிரபு மற்றும் பொன்னுசாமி (இந்திய கம்யூ.,), ரவி (மார்க்சிஸ்ட் கம்யூ.,), ஜிதேந்திரன் (காங்கிரஸ்), பொன்னையன் (தற்சார்பு விவசாயிகள் சங்கம்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vehicle rally ,Delhi ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி