×

குடியரசு தினவிழா கொண்டாட்டம்

ஈரோடு, ஜன.27: குடியரசு தினத்தையொட்டி ஈரோட்டில் கலெக்டர் கதிரவன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டின் 72வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா பரவல் காரணமாக எளிமையாக குடியரசு தினவிழா ஈரோடு வஉசி மைதானத்தில் நேற்று காலை கொண்டாடப்பட்டது. தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய கலெக்டர் கதிரவன், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து காவல்துறை, தீயணைப்பு துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என 197 பேருக்கு பதக்கங்கள், நற்சான்றிதழ்களை வழங்கினார். கொரோனா பரவல் காரணமாக நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் ரத்து செய்யப்பட்டது. வழக்கமாக சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு விழா மேடை அருகே சால்வை அணிவித்து கவுரப்படுத்தப்படுவது வழக்கம்.

ஆனால், கொரோனா காரணமாக சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று கலெக்டர் கதிரவன் மரியாதை செலுத்தினார். விழாவில், எஸ்பி தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, ஈரோடு கோட்டாட்சியர் சைபுதீன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், ஈரோடு சம்பத்நகரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் குடியரசு தினவிழா நடைபெற்றது. விழாவில், முதன்மை மாவட்ட நீதிபதி முருகேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இவ்விழாவில் பார் அசோசியேசன் தலைவர் ரமேஷ், அட்வகேட் அசோசியேசன் தலைவர் நல்லசிவம், வக்கீல்கள் சங்க தலைவர் ஆறுமுகம் மற்றும் நீதிபதிகள், கோர்ட்டு ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, மாவட்ட நீதிபதி நேர்முக உதவியாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். முடிவில், மாவட்ட முதன்மை ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு ஜோதி நன்றி கூறினார்.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆணையாளர் இளங்கோவன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில், உதவி ஆணையர் விஜயகுமார், அசோக்குமார், சண்முகவடிவு, விஜயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், துப்புரவு பணியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட சிறப்பாக பணியாற்றிய 42 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வங்கியின் தலைவர் கிருஷ்ணராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஈரோடு முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் முருகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில், ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் மாதேசன், அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் யாமினி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் கலைச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் குடியரசு தினத்தையொட்டி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. சத்தியமங்கலம்,பவானிசாகர்: நாட்டின் 72 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் கொடியேற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.  பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவில் ஒன்றியக் குழுத் தலைவர் சரோஜா பழனிச்சாமி கொடி ஏற்றி வைத்தார். இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மைதிலி, லதா, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவில் ஒன்றிய குழு தலைவர் கே.சி.பி.இளங்கோ கொடி ஏற்றி வைத்தார். இவ்விழாவில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் வகாப், பெருமாள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பவானிசாகர் ஒன்றியத்திற்குட்பட்ட மாதம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் காளியப்பன் கொடியேற்றி வைத்தார். தொப்பம்பாளையம் ஊராட்சியில் நடந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி நாகேந்திரன் கொடியேற்றி வைத்தார். புங்கார் ஊராட்சியில் நடந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் கா.கி. ராஜேந்திரன் கொடியேற்றி வைத்தார். கொத்தமங்கலம் ஊராட்சியில் நடந்த விழாவில் தலைவர் மல்லிகா சண்முகம் கொடி ஏற்றி வைத்தார். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோணமூலையில் நடந்த குடியரசு தின விழாவில் ஊராட்சி  தலைவர் செந்தில்நாதன் கொடி ஏற்றி வைத்தார். மாக்கினாங்கோம்பை ஊராட்சியில் நடந்த விழாவில் ஊராட்சி தலைவர் அம்மு ஈஸ்வரன் கொடியேற்றி வைத்தார். கூத்தம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மாக்கம்பாளையத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் கூத்தம்பாளையம் ஊராட்சி தலைவர் சந்திரா சரவணன் கொடி ஏற்றி வைத்தார். குன்றியில் நடந்த நிகழ்ச்சியில்  ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ் கொடியேற்றி வைத்தார். கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Republic Day Celebration ,
× RELATED குடியரசு தின விழா கொண்டாட்டம்