விருகம்பாக்கத்தில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் ஊர்வலம்: உதயநிதி ஸ்டாலின் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: விருகம்பாக்கத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் ஊர்வலத்தில் உதயநிதி ஸ்டாலின் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் வீரர்களின் வீரவணக்க நாளை முன்னிட்டு நேற்று காலை விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவில் இருந்து மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து தியாகி ஒய்.அரங்கநாதன் நினைவிடத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், ப.தாயகம்கவி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் எஸ்.குணசேகரன், பொருளாளர் எஸ்.பாஸ்கரன், பகுதிச் செயலாளர்கள் கே.கண்ணன், மு.ராசா, சு.சேகர், பொதுக்குழு உறுப்பினர் டி.எஸ்.தங்கராஜ் உள்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். இதே போல தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் ஊர்லம், வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக முன்னணியினர், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: