சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம்

சேலம், ஜன.26: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 11வது தேசிய வாக்காளர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் ராமன் இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளையும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். வாக்காளர் வசதிக்காக மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வசதியை அறிமுகம் செய்து வைத்தார். இவ்விழாவில் கலெக்டர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட நாளான ஜனவரி 25ம் தேதி 1950ம் நாளினை நினைவு கூறும் வகையில், தேசிய வாக்காளர் தினம் கடந்த 2011ம் ஆண்டு முதல் ஜனவரி 25ம் தேதியினை இந்திய தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடி வருகிறது. நேற்று 11வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் 2021ம் ஆண்டின் கருப்பொருளாக ‘நம் வாக்காளர்களை விழிப்புணர்வுடன், பாதுகாப்பான, தகவலறிந்த, அதிகாரமிக்கவர்களாக உருவாக்குவோம்’  என்று அறிவித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடி அமைவிடத்திலும் தேசிய வாக்காளர் தின விழா நடக்கிறது.

இன்றைய தினத்தில் புதிதாக வாக்காளர் பட்டியலில் தமது பெயரை சேர்த்துக்கொண்ட இளம் வாக்காளர்கள் கவுரவிக்கப்படுவார்கள். 18 வயது நிரம்பிய அனைவரும் தங்களை வாக்காளர்களாக கட்டாயம் இணைத்து கொள்ள வேண்டும். வாக்காளர்களின் வசதிக்காக மின்னணு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. தற்போது புதிய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பி.வி.சி. அட்டையுடன் கூடுதலாக மின்னனு முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. அனைத்து புதிய வாக்காளர்களும் ஜனவரி 31ம் தேதி வரை, மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யும் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கனவே அடையாள அட்டை பெற்றுள்ள வாக்காளர்கள், பிப்ரவரி 1ம் தேதி முதல் மேற்குறிப்பிட்டுள்ள வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ராமன் கூறினார். இதேபோல், சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமையில், வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>