இடைப்பாடி அருகே கோனேரிப்பட்டி ஓம்காளியம்மன் கோயில் கும்பாபிசேகம் முதல்வர் பங்கேற்பு

சேலம், ஜன.26: இடைப்பாடி அருகேயுள்ள கோனேரிப்பட்டியில் உள்ள ஓம்காளியம்மன் கோயில் கும்பாபிசேக விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தார். சேலம் மாவட்டம், இடைப்பாடி தொகுதியிலுள்ள கோனேரிப்பட்டியில் விநாயகர், ஓம்காளியம்மன் கோயில் கும்பாபிசேக விழா நேற்று காலை நடந்தது.  இதையொட்டி, கடந்த 17ம்தேதி யாக சாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று (திங்கள்) காலை 9.30 மணிக்கு கோயில் கும்பாபிசேக விழா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. அப்போது முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. மனைவி ராதாவுடன் முதல்வர் யாகசாலை முன்பு அமர்ந்து வழிபட்டார். பின்னர், மூலவர், பரிவார தெய்வங்கள் மற்றும் கோபுர கலசத்திற்கு கும்பாபிசேகம் நடந்தது. அப்போது, 3 கழுகுகள் வானில் வட்டமிட்டதை கண்டு முதல்வர் பயபக்தியுடன் வழிபட்டார். கும்பாபிசேகத்தை கிரிதரன் பட்டாச்சாரியார் மற்றும் சிவாச்சாரியார்கள்  நடத்தினர். இதையடுத்து கும்பாபிசேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், டிஐஜி பிரதீப்குமார், எஸ்.பி., தீபா உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். கும்பாபிசேகத்தை முடித்துக்கொண்டு முதல்வர் சேலம் திரும்பினார். பின்னர் மாலை 3 மணிக்கு உளுந்தூர்பேட்டை புறப்பட்டுச்சென்றார்.

Related Stories:

>