திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்பினர் மொழிப்போர் தியாகிகளுக்கு மலரஞ்சலி

திருச்சி, ஜன.26: இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவு வீரவணக்க நாள் ஆண்டு தோறும் ஜனவரி 25ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மொழிப்போர் தியாகிகள் விராலிமலை சண்முகம், கீழப்பழுவூர் சின்னசாமி ஆகியோரது நினைவிடம் திருச்சி, தென்னூர் உய்யகொண்டான் ஆற்றங்கரையில் உள்ளது. நேற்று மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளையொட்டி திமுக சார்பில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் சாஸ்திரி ரோட்டிலிருந்து ஊர்வலமாக வந்த திமுகவினர் தியாகிகள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினர்.

மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகர செயலாளர் அன்பழகன், எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், இலக்கிய அணி மாநில துணை செயலாளர் தர், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன், தமிழன் பிரசன்னா, கருணை ராஜா, போஸ் வெங்கட், தொண்டரணி, மகளிரணி, மாணவரணி, இளைஞரணி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

அதிமுக சார்பில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாவட்ட செயலாளர்கள் தெற்கு குமார், வடக்கு பரஞ்ஜோதி, மாநகர் மாவட்ட துணை செயலாளர் வனிதா, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், மாணவரணி செயலாளர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலையிலிருந்து ஊர்வலமாக சென்றனர். மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். விசி கட்சி சார்பில் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் பிரபகாரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, சேரன், மணவை தமிழ்மாணிக்கம், மாநில மகளிரணி செயலாளர் டாக்டர் ரொகையா உள்ளிட்ட மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமமுக சார்பில் மாநில பொருளாளர் மனோகரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பாமக, நாம் தமிழர் கட்சியினர் மரியாதை செய்தனர். அதேபோல தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், ஏஐடியூசி, தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தினர், இளைஞர், மாணவர் பெருமன்றத்தினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வீரவணக்கம் செலுத்தினர்.

Related Stories: