இன்று 72வது குடியரசு தினம் திருட்டு, கொள்ளைகளை கண்டுபிடிக்க மாநகர போலீசுக்கு புதுவரவு லொள்..லொள்.. ‘பொன்னி’

திருச்சி, ஜன. 26: திருச்சி மாநகர குற்றப்பிரிவிற்கு புது வரவாக பொன்னி மோப்ப நாய் வந்துள்ளது. நவீனங்களும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்துள்ள நிலையில், அதே வேகத்தில் குற்றங்களும் பல்வேறு வகைகளில் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிக்க முடியாவிட்டாலும், விரைவில் பிடிக்கவும், அதே குற்றங்கள் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்கவும் காவல்துறையும் நாளுக்கு நாள் புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகிறது. அதே நேரம் போலீசாரின் துப்பு துலக்கும் பணிக்கு உதவும் 5 அறிவு கொண்ட மோப்ப நாய்களின் பங்கு மகத்தானது. காவல்துறையில் துப்பு துலக்குவதற்கு பயன்படுத்தும் மோப்ப நாய்களுக்கு கோவையில் துப்பறியும் பயிற்சி மையம் செயல்படுகிறது. அங்கு குட்டிகளாக கொண்டு வரப்படும் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. திருச்சி மாநகரில் குற்றப்பிரிவில் குற்றங்களை கண்டறிய மாவட்ட போலீசாரிடம் மோப்ப நாய் இரவல் வாங்கப்பட்டது.

தற்போது மாநகர குற்றப்பிரிவிற்கு கோவையில் பயிற்சி பெற்ற பொன்னி என்ற டாபர்மேன் நாய் புதிய வரவாக வந்துள்ளது. ஒன்றரை வயதாகும் பொன்னி கோவையில் வெற்றிகரமாக பயிற்சியினை நிறைவு செய்து நேற்று திருச்சி வந்து பணியை துவக்கியது. நேற்று பணியை துவக்கிய மோப்ப நாய் பொன்னி, முன்னதாக மாநகர கமிஷனர் அலுவலகத்தில் மாநகர கமிஷனர் லோகநாதன் முன் மரியாதை செலுத்தியது. அப்போது துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி இருந்தார்.

திருச்சியில் உள்ள மோப்ப நாய் பராமரிப்பு இல்லத்தில் பொன்னிக்கு பயிற்சியாளர்களாக வெங்கட்ராமன் மற்றும் முத்து எத்திராஜ் ஆகியோர் பணியில் உள்ளனர். இது தவிர ஏற்கனவே இங்கு மாநகரில் டெய்சி, ரூபி ஆகிய மோப்ப நாய்கள் வெடிகுண்டு கண்டுபிடிப்பதில் பணியில் உள்ளது. போதை பொருட்களை கண்டுபிடிக்க டைகர் என்ற மோப்ப நாய் உள்ளது. இதுபோல் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக மத்திய அரசு 6 மோப்ப நாய்கள் வழங்கியுள்ளது. இந்த நாய்களுக்கு மத்திய பிரதேசத்தில் உள்ள டெக்கான்பூர் என்ற இடத்தில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: