×

ரங்கம் கோயிலில் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

மண்ணச்சநல்லூர், ஜன.26: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைத்தேரோட்ட திருவிழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திர வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் 4ம் நாளான 22ம்தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்திரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் 7ம் நாளான நேற்று திருச்சிவிகையில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் உள்திருவீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதியை வந்தடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று (26ம்தேதி) அதிகாலை 2 மணியளவில் நம்பெருமாள் கண்ணாடி அறை சென்றடைந்தார்.

இன்று காலை 7.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு உத்தர வீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (27ம் தேதி) காலை நடைபெறுகிறது. அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு 4.30 மணிக்கு வருகிறார்.

காலை 4.45 மணிமுதல் காலை 5.15 மணி வரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது. 28ம் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 29ம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். அத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் அசோக்குமார் (கூடுதல் பொறுப்பு) மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Namperumal ,Upayanacharyas ,Aurangama ,
× RELATED மகாபிஷேகம் காணும் ஸ்ரீராகவேந்திரர்