×

உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 9.71 லட்சம் குடும்பங்களில் கணக்கெடுப்பு

*2,315 தன்னார்வலர்கள் நியமனம்

சேலம் : சேலம் மாவட்டத்தில் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தின் கீழ், 9.71 லட்சம் குடும்பங்களில் கணக்கெடுக்கும் பணியை, அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற புதிய திட்டத்தினை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஊராட்சியில் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் ஓமலூரில் இத்திட்ட தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். எம்பி டி.எம்.செல்வகணபதி முன்னிலை வகித்தார். இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது:

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று ஒரு வரலாற்று நிகழ்வாக உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தின் கீழ் விரிவான கணக்கெடுப்பு பணியினை திருவள்ளூரிலிருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்.

இத்திட்டத்தின்படி ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், தமிழ்நாடு அரசால் பயன்பெற்ற திட்டங்கள், அவற்றில் மிகவும் பயனுள்ளதாக கருதும் 3 திட்டங்கள் மற்றும் 2030ம் ஆண்டிற்குள் அரசு பூர்த்தி செய்ய வேண்டிய முதன்மையான மூன்று தேவைகளை (திட்டங்கள்) கணக்கெடுப்பு படிவம் மூலம் பெறுகின்றனர்.

இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மொபைல் ஆப் மூலம் தன்னார்வலர்கள் கொண்டு பதிவு செய்து அதன் அடிப்படையில் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் பிரத்யேக கனவு அட்டை வழங்கப்படும். இதன்மூலம் ஊரக மற்றும் நகரப்புற பகுதி குடும்பங்களின் தேவைகளை அறிந்து தொலைநோக்கு அறிக்கை தயார் செய்யப்படும். பின்னர் அதன்படி தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு முதல்வரால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள 6,50,560 குடும்பங்களிலும், நகரப் பகுதிகளில் 3,20,685 குடும்பங்களிலும் என, மொத்தம் 9,71,265 குடும்பங்களுக்கான கணக்கெடுப்பு நடக்கிறது.

தற்போது தொடங்கி வரும் 31ம் தேதி வரை இப்பணி நடைபெறும். சேலம் மாவட்டத்தில் இதற்கென ரேஷன் கடை வாரியாக 2,315 தன்னார்வலர்கள் மற்றும் 629 மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.தொடர்ந்து, அமைச்சர் ராஜேந்திரன், ஓமலூர் அடுத்த கோட்டமேட்டுப்பட்டி ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் தன்னார்வலர்களுடன் இணைந்து, உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு படிவங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார். உதவி கலெக்டர் (பயிற்சி) விவேக் யாதவ், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ஜெய் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Salem ,Minister ,Rajendran ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,
× RELATED மக்கள் தொகை கணக்கெடுப்பு; “ஆலோசனை குழு...