*திறப்பு விழா காணுமா? மக்கள் எதிர்பார்ப்பு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரம் வழியாக பிற மாவட்டம் மற்றும் கேரள மாநில பகுதிக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது. இங்கு, போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துகளை கட்டுப்படுத்த, உடுமலை ரோடு மரப்பேட்டையில் இருந்து தேர்நிலை வழியாக பஸ் நிலையம், நியூ ஸ்கீம் ரோடு காந்தி சிலை, பல்லடம் ரோடு குறிப்பிட்ட பகுதி வரையிலும் ரூ.52 கோடியில், சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழித்தடமாக ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது.
நகரின் மையப்பகுதியில் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட நேரத்தில், முக்கிய சந்திப்பு பகுதிகளில் ரவுண்டானா அமைக்கும் பணியும் நடைபெற்றது. இதில் முக்கியமாக இரு பஸ் நிலையம் அருகே, கோவை ரோடு நியூ ஸ்கீம் ரோடு சந்திப்பு பகுதி, தேர்நிலை, பெரிய பள்ளி வாசல் உள்ளிட்ட பகுதிகளில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. அதன்பின் சில ஆண்டுகளுக்கு பிறகு, நியூ ஸ்கீம் ரோடு, பல்லடம் ரோடு சந்திப்பு பகுதியில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, இப்பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விரிவாக்கம் செய்யப்பட்ட ரோட்டின் மையப்பகுதியில் அமைக்கப்பட்ட ரவுண்டானா பகுதிகளை நகராட்சி மூலம் மேம்படுத்துவதுடன், பாரம்பரிய சிலைகள் அமைத்தும், ஓவியங்கள் வரைந்தும் ரூ.25 லட்சத்தில் அழகுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து, ரவுண்டானாவை மேம்படுத்தி அழகுபடுத்துவதற்கான பணி சில வாரத்திற்கு முன்பு துவங்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக ரவுண்டானா பகுதிகளை சீரமைக்கும் பணி நடைபெற்றது.
தற்போது அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. கடந்த சில நாட்களாக மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் புற்கள் பதிக்கும் பணியும், அதன்பின் செடிகள் வைத்து அழகுபடுத்தும் பணி நடைபெற்றது.
அடுத்து, காந்தி சிலை, தேர்நிலை, பல்லடம் ரோடு, பெரியபள்ளி வாசல் அருகே உள்ள ரவுண்டானா உள்ளிட்ட 8 ரவுண்டானாக்களை அழகுபடுத்தும் பணி நடைபெற உள்ளது. இப்பணிகளை இன்னும் சில வாரத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
