*வட மாநிலத்தவர்கள் நெகிழ்ச்சி
வல்லம் : குடும்பத்துடன் தங்கி விவசாயம் மற்றும் வீட்டு உபகரணங்கள் செய்யும் தங்களுக்கு தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலமாக உள்ளதாக வட மாநிலத்தவர்கள் தெரிவித்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் மனிந்த்சோரா கிராமத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 10 பேர், தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டி கிராமத்தின் சாலையோரத்தில் கொல்லுப்பட்டறை அமைத்துள்ளனர்.
இவர்கள், தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று, பொதுமக்கள் கூடும் இடங்களில் கூடாரம் அமைத்து தங்கி, அரிவாள், கத்தி, சுத்தியல், கோடாரி, மண்வெட்டி, கடப்பாரை, களைக்கொத்தி, கதிர் அரிவாள் உள்ளிட்ட பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருக்கானூர்பட்டியில் முகாமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள உபகரணங்களின் வடிவங்களைப் போல் அல்லாமல் சற்று வித்தியாசமான வடிவங்களில் இந்த உபகரணங்கள் உள்ளன. இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களுக்கு வேண்டிய இந்த பொருள்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதில், சிறப்பம்சம் என்னவெனில் பொதுமக்கள் கண்முன்னே இரும்பு பட்டைகளை உருக்கி, விரும்பிய வடிவங்களில் பொருட்களை உருவாக்கி தருகின்றனர்.
இவர்கள் தங்கள் தொழிலுக்கான மூலப் பொருட்களாக லாரி ஸ்பிரிங் பட்டைகள், ராடுகள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இவர்களின் நேர்த்தியான தயாரிப்புகளை விவசாயிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர். குறைந்த விலையில் நேர்த்தியான விவசாய உபகரணங்களை கண்முன்பே செய்து தருவதால் இவர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு எந்த பகுதிக்கு சென்றாலும் ஆதரவு அதிகம்தான் உள்ளது.
இது குறித்து மத்தியபிரதேசம் மனிந்த்சோரா கிராமத்தை சேர்ந்த ஜித்தேந்திரன் கூறுகையில், நாங்கள் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருந்து வந்துள்ளோம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் இங்கு விவசாயத்திற்கு தேவையான பொருள்களை தயாரித்து விற்று வருகிறோம். எங்கள் தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த உறவு 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.
நான் சிறுவயதில் இருந்தே தமிழகத்திற்கு வந்து இந்த உபகரணங்களை தயாரித்து கொடுத்து வருகிறோம்.
நாங்களே கருவிகளை செய்வதால் விலை குறைவாக கொடுக்க முடிகிறது.சின்ன உபகரணங்கள் ரூ.100 முதலும் பெரியஅளவு அரிவாள், கோடாரி போன்றவை ரூ.300 முதல் தருகிறோம். மேலும் விவசாயிகள் அவர்களுக்கு தேவையான உபகரணத்தை எப்படி கேட்கிறார்களே அப்படி செய்து வருகிறோம்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்திற்கு வந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் செல்லும் எங்களுக்கு மிகவும் பாதுகாப்பான பகுதியாகவும், வாழ்வாதாரத்தையும் அளிக்கிறது. இங்குள்ள மக்கள் அன்புடன் பழகுகின்றனர். இங்கு வியாபாரம் குறையத் தொடங்கினால் வேறு இடங்களுக்கு மாறி செல்வோம் என்று நெகிழ்ச்சியாக கூறினார்.
