சேதுபாவாசத்திரம் அருகே கோயிலுக்கு செல்லும் பொதுபாதையில் ஆக்ரமிப்பை அகற்ற வேண்டும்

சேதுபாவாசத்திரம், ஜன.26: சேதுபாவாசத்திரம் அருகே கழனிவாசல் ஊராட்சி கொரட்டூரில் பொதுவழிப்பாதையில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கொரட்டூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகே பொதுவழி பாதையையும், நீர்வடியும் வாய்க்காலையும் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டியும், சுற்றுச்சுவர் அமைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் தண்ணீர் வடியாமல், ஊருக்குள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த நீலகண்டன், சோமசுந்தரம், ராஜ்குமார் ஆகியோர் கூறுகையில், தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பல முறை போராட்டம் நடத்தியும், அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இந்த சாலையை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் சுமார் 1 கி.மீ தூரம் சுற்றி வரும் நிலை உள்ளது. ஆனந்தவள்ளி வாய்க்கால் தண்ணீர் வடியாமல், வீடுகளுக்குள் புகுந்து விட்டது. அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், கிராம மக்கள் திரண்டு, தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Related Stories: