×

புதிய வாக்காளர்களுக்கு மின்னணு வாக்காளர் அடையாள அட்டை புதுகை கலெக்டர் வழங்கினார்

புதுக்கோட்டை, ஜன.26: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதிய வாக்காளர்களுக்கு மின்னணு முறையிலான வாக்காளர் அடையாள அட்டையினை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வழங்கினார். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று அனைத்து வாக்காளருக்கும் வாக்களிக்குமாறு அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் வாக்காளர் தின உறுதிமொழியினை எடுத்து கொண்டனர். இதனை தொடர்ந்து இளம் புதிய வாக்காளர்களுக்கு மின்னணு முறையிலான வாக்காளர் அடையாள அட்டையை கலெக்டர் உமாமகேஸ்வரி வழங்கி கூறும்போது, பொதுமக்கள் அனைவரும் தேசிய வாக்காளர் தினம் குறித்து விழிப்புணர்வை பெற்று தேர்தலில் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையினை நிறைவேற்ற வேண்டும் என்றார். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் புதுக்கோட்டை பொதுஅலுவலக வளாகத்திலிருந்து வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்து, புதுக்கோட்டை நகர்மன்றத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன், தாசில்தார் முருகப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : voters ,Renewal Collector ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...