×

கடந்த 6ம் தேதி திறக்கப்பட்ட திருப்பெருந்துறை பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?

அறந்தாங்கி, ஜன.26: திருப்பெருந்துறை (ஆவுடையார்கோவில்) பேருந்து நிலையம் 6 ஆண்டுகளுக்கு பிறகு, திறக்கப்பட்ட நிலையில் இன்னும் பயன்பாட்டிற்கு வராததால் பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருப்பெருந்துறை ஊராட்சி ஆவுடையார்கோவில் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி போன்ற முக்கிய ஊர்களில் இருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆவுடையார்கோவில் வழியாகவே செல்ல வேண்டும். சென்னை, திருச்சி, தேவகோட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, காரைக்குடி, திருச்செந்தூர், திருப்புனவாசல், மீமிசல், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான பேருந்துகள் ஆவுடையார்கோவில் வந்து செல்கின்றன.

இது தவிர இங்கிருந்து பல்வேறு கிராமங்களுக்கு நகரப்பேருந்துகளும் சென்று வருகின்றன. ஆவுடையார்கோவிலுக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் கடைவீதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்கின்றன. இதனால் இப்பகுதியில் பல நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆவுடையார்கோவில் வந்து செல்லும் பேருந்துகள் நின்று செல்வதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ.,வாக ராஜநாயகம் இருந்தபோது, 2015-2016ம் ஆண்டு சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் திருப்பெருந்துறை ஊராட்சி பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நிதி ஒதுக்கப்பட்டு பேருந்து நிலைய கட்டுமானப்பணிகள் முடிந்த நிலையில், எம்.எல்.ஏ ராஜநாயகம் பதவிக்காலம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக திருப்பெருந்துறை ஊராட்சி பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த சேர்கள் உடைக்கப்பட்டும், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும் பேருந்து நிலையம் மாறியது.
இந்த நிலையில் திருப்பெருந்துறை ஊராட்சி பேருந்து நிலையம் கட்டப்பட்டு 6 ஆண்டுகள் ஆனநிலையில் இம்மாதம் 6ம் தேதி திருப்பெருந்துறை பேருந்துநிலையத்தை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

ஆனால் இந்த பேருந்துநிலையம் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராமல், வழக்கம்போலவே கடைவீதியில் நிறுத்தப்படுகின்றன. திருப்பெருந்துறை பேருந்துநிலையத்தை கடந்த கட்டப்பட்டவுடன் திறந்திருந்தால், திருப்பெருந்துறை கிராம ஊராட்சிக்கு ஆண்டுக்கு பல லட்ச ரூபாய் வருவாய் ஈட்டி தந்திருக்கும். ஆனால் பேருந்து நிலையத்தை சில காழ்ப்புணர்ச்சியால் திறக்காததால், மக்களின் வரிப்பணம் வீணானது. இந்நிலையில் நடைபெற உள்ள தேர்தலை மனதில் கொண்டு திறக்கப்பட்ட திருப்பெருந்துறை பேருந்து நிலையத்தை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையாகும்.

Tags : bus stand ,Tiruperundurai ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை