×

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதிரடி

சென்னை: நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு உடனடியாக சான்று வழங்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று கோரி தயாரிப்பு நிறுவனம் கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது.

சென்சார் போர்டு தரப்பில் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் வாதிடும்போது, படத்துக்கு எதிராக புகார் வந்துள்ளதால், படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வுக் குழு பரிந்துரைகளில் திருப்தியில்லை என்றால் திரைப்படத்தை மறுபரிசீலனைக்காக மறு ஆய்வு குழுவிற்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார்.

தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் வாதிடும்போது, படத்தை முதலில் பார்த்த குழுவினர் ஒருமனதாக சான்று வழங்க முடிவு செய்தனர். படத்தை பார்த்த சென்சார் போர்டு குழு உறுப்பினர் புகார் தெரிவிக்க முடியாது. உறுப்பினர் பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். உறுப்பினர் இப்போது புகார்தாரராகியுள்ளார். 5 பேரில் 4 பேர் அதாவது பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர்.

பெரும்பான்மை இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வு செய்ய முடியும். ஒரு உறுப்பினர் எப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை செல்லாது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களைக்கேட்ட நீதிபதி, படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க வேண்டும் என்று நேற்று காலை உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது.

அப்போது, உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டிய அவசரம் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்கில் பதில்மனு செய்ய அவகாசம் கோரியும், அவகாசம் வழங்காமல், உடனடியாக சான்று வழங்கும்படி தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

படத்தை மறு ஆய்வு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்காத நிலையில், அந்த உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்துள்ளார். படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து பட நிறுவனம் வழக்கு தொடரவில்லை. அதனால் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார். தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தணிக்கை குழு படத்திற்கு சான்று வழங்க பரிந்துரைத்த நிலையில் மறு ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனால்தான் வழக்கு தொடர்ந்தோம் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், சென்சார் போர்டு பதிலளிக்க அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன?. படத்துக்கு சான்று பெறும் முன்பு வெளியீட்டு தேதி அறிவித்தது ஏன்?. சென்சார் போர்டு சான்று வழங்க பல நடைமுறைகள் இருக்கும் போது, சான்றுக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

அதை விடுத்து நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் தேதியை அறிவித்துள்ளீர்கள் என்பதற்காக எல்லாரும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து, ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், சென்சார் போர்டு மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்குமாறு பட நிறுவனத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

* ‘ஒன்றிய அரசின் புதிய ஆயுதம் சென்சார் போர்டு’முதல்வர் கண்டனம்
சிபிஐ, இ.டி. ஐ.டி வரிசையில் ஒன்றிய அரசின் புதிய ஆயுதமாக சென்சார் போர்டு மாறியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: சிபிஐ, இ.டி. ஐ.டி வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பாஜ அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடும் கண்டனங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Vijay ,Madras High Court ,Chennai ,High Court ,KVN Productions ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...