×

கஜா புயல் பாதிப்பு நிவாரணம் இன்னும் வழங்காததை கண்டித்து சிறு, குறுந்தொழில் சங்கம் உண்ணாவிரதம்

நாகை, ஜன. 26: கஜா புயல் பாதிப்பு நிவாரணம் இன்னும் வழங்காததால் நாகையில் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி நாகை அவுரித்திடலில் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நாகை எம்பி செல்வராசு தலைமை வகித்தார். சிறு மற்றும் குறுந்தொழில் சங்க நாகை மண்டல தலைவர் ராமச்சந்திரன் வரவேற்றார். நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு 35 சதவீத இழப்பீடு வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்தது. ஆனால் 2 ஆண்டுகளாகியும் இன்னும் இழப்பீடு வழங்கவில்லை. ஆனால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கஜா புயலால் பாதித்த சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சிட்கோ தொழிற்பேட்டையில் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது போல் நாகை மாவட்டத்தில் சிட்கோ தொழிற்பேட்டையில் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மர அறுவை மில் சங்க தலைவர் கந்தசாமி நன்றி கூறினார்.

உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற நாகை எம்பி செல்வராசு நிருபர்களிடம் கூறியதாவது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு 35 சதவீத இழப்பீடு வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்து 2 ஆண்டுகளாகி விட்டது. அதேபோல் சிட்கோ தொழிற்பேட்டையில் இடஒதுக்கீடு கேட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முன்பணம் கட்டியும் இதுவரை இடஒதுக்கீடு செய்யவில்லை. ஆனால் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் பாதித்த சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க ஆவணங்களில் கையொப்பம் போடப்பட்டும் இன்னும் கிடப்பில் உள்ளது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்

Tags : Small and Micro Enterprises Association ,hunger strike ,victims ,
× RELATED பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்