×

தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையை செப்பனிடக்கோரி சிக்கல் பகுதியில் மறியல் போராட்டம்

நாகை, ஜன. 26: தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையை செப்பனிடக்கோரி சிக்கல் பகுதியில் மறியல் போராட்டம் நடத்திய எம்எல்ஏ தமிமுன் அன்சாரி உட்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை முதல் நாகை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மழையால் சேதமடைந்து கடந்த 3 மாதங்களாக பல விபத்துகளை சந்தித்து வருகிறது. இதுகுறித்து நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, தஞ்சையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசியும் நடவடிக்கை இல்லை. மேலும் நாகை ரயிலடி முதல் ஆழியூர் வரை நாகை தொகுதியில் அந்த சாலை மிக மோசமாக உள்ளது. அதேபோல் நாகை கோட்டை வாசல்படி முதல் மின்சார வாரிய துணை மின் நிலையம் அருகே சாலை சேதமடைந்து காணப்படுகிறது.

இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையை செப்பனிடக்கோரி நாகை அருகே சிக்கல் கடைவீதியில் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தலைமை வகித்தார். இதனால் நாகை- தஞ்சை சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்தனர். பின்னர் நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது: இப்போது அதிகாரிகள் வந்து டெண்டர் விடப்பட்டு விட்டது என்றும், விரைவில் பணிகள் துவங்கப்படும் என்கின்றனர். அவர்கள் அதை செய்யாவிட்டால் அடுத்தடுத்து மறியல் நடைபெறும் என்றார்.

Tags : Tanjore-Nagai National Highway ,
× RELATED சோளத்தட்டை, வைக்கோல் போர் எரிந்து நாசம்