கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு லேப்டாப் கேட்டு மாணவர்கள் தர்ணா

கரூர், ஜன. 26: கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு லேப்டாப் கேட்டு மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கோரிக்கை சம்பந்தமான மனுக்களை வழங்கிச் சென்றனர்.இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மேல்நிலைப்பள்ளிகளில் 2017-18ம் ஆண்டில் பிளஸ் 2 பயின்ற 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து, நுழைவு வாயில் அருகே திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, 2017-18ம் ஆண்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற நாங்கள் தற்போது பல்வேறு கல்லூரிகளில் பயின்று வருகிறோம். அந்த கல்வியாண்டில் பயின்ற எங்களுக்கு இதுநாள் வரை லேப்டாப் வழங்கப்படவில்லை. அதற்கு பிறகு பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டதைப் போல எங்களுக்கும் லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதனையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கலெக்டர் அலுவலக அதிகாரிகள், மாணவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, விரைவில் லேப்டாப் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதன் காரணமாக ஒரு மணி நேரம் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

Related Stories: