×

வாக்காளர் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மாணவ,மாணவிகள் பங்கேற்பு

ராமநாதபுரம், ஜன.26:  ராமநாதபுரம் அரண்மனை அருகே நேற்று தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். 1950ம் ஆண்டு ஜன.25ம் நாள் இந்திய தேர்தல் ஆணையம் துவங்கப்பட்ட நாளாகும். பொதுமக்களிடத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் வகையில் இத்தினத்தினை தேசிய வாக்காளர் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சைக்கிளில் பேரணியாகச் சென்றனர். பேரணி அரண்மனை வளாகத்தில் துவங்கி ரோமன் சர்ச் வழியாக ராமநாதபுரம் சுவாட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது.
பின்னர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாவில் கலெக்டர், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளையும், புதிய வாக்காளர்களுக்கு வண்ண புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் அடையாள அட்டைகளையும் வழங்கினார். மேலும், கலெக்டர் தலைமையில் மாணவ,மாணவிகள் அனைவரும் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்தக் கொண்டனர். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி, சார் ஆட்சியர் சுகபுத்ரா, வருவாய் வட்டாட்சியர் முருகவேல் உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : awareness cycle rally ,eve ,Voter ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்