×

காதல் மனைவியை ஆஜர்படுத்துமாறு கிரிக்கெட் வீரர் வழக்கில் போலீசாருக்கு உத்தரவு

மதுரை, ஜன. 26: காதல் மனைவியை ஆஜர்படுத்தக் கோரிய வழக்கில் போலீசார் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம், பெருமகளூரைச் சேர்ந்த சுரேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சிங்கப்பூர் நாட்டிற்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். 2018 முதல் நானும் வேறு சமூகத்தைச் சேர்ந்த சிநேகா என்பவரும் காதலித்தோம். முதலில் எதிர்ப்பு தெரிவித்த சிநேகாவின் குடும்பத்தினர் பின்னர் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டனர். திடீரென சிநேகாவிற்கு வேறு மாப்பிள்ளை பார்க்கத் துவங்கினர். இதுகுறித்து சிங்கப்பூரில் இருந்த எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தியா வந்த நான், டிச. 13ல் திருவோணம் செல்வமுருகன் கோயிலில் திருமணம் செய்தேன். திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம்.

நான், சிங்கப்பூர் சென்ற நேரத்தில், என் மனைவியை அவரது பெற்றோர் சமரசம் பேசி அழைத்துச் சென்றனர். அவர்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகின்றனர். இதற்கு அவர் ஒத்துக்கொள்ளாவிட்டால் ஆணவக்கொலை செய்யும் அபாயம் உள்ளது. அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. சட்டவிரோதமாக கடத்தி மறைத்து வைத்துள்ளனர். என் மனைவி உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதே தெரியவில்லை. நீதிமன்றம் தலையிட்டு என் மனைவி சிநேகாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஜி.இளங்கோவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வக்கீல் மாணிக்கம் ஆஜராகி, ‘‘போலீசார் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றார். இதையடுத்து போலீசார் தரப்பில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜன. 29க்கு தள்ளி வைத்தனர்.

Tags : love wife ,
× RELATED காதல் மனைவியை கொன்று கொரோனாவால் இறந்ததாக நாடகம்: கைதான கணவன் ‘பகீர்’