வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ஊட்டி,ஜன.26: நீலகிரியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வெயில் அடித்து வரும் நிலையில் ஊட்டி வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. பின், கடந்த செப்டம்பர் மாதம் முதல் சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டது. தற்போது சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவதற்கு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனினும், கடந்த இரு மாதங்களாக ஊட்டியில் எந்நேரமும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை காணப்பட்டது.

இதனால், கடும் குளிர் நிலவியது. மோசமான காலநிலையால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக காலநிலையில், மாற்றம் ஏற்பட்டு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக அதிகமாக காணப்படுகிறது. பொதுவாக வார இறுதி நாட்களிலேயே சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படும். வார நாட்களில் கூட்டம் குறைவாக காணப்படும். ஆனால், வார நாட்களில் கூட தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, அண்டை மாநிலமான கேரளா,கர்நாடாகா மாநில சுற்றுலா பயணிகளே அதிகம் ஊட்டி வருகின்றனர். நேற்றும் ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் முகாமிட்டிருந்தனர். இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: