முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கோவையில் 73 ஜோடிகளுக்கு திருமணம்

கோவை, ஜன. 26: கோவையில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, 73 ஜோடிகளுக்கு திருமணம் நடக்கிறது. முதல்வர், துணை முதல்வர் திருமணத்தை நடத்தி வைக்கின்றனர் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான திருமணம் அடுத்த மாதம் 15ம் தேதி கோவை சிறுவாணி மெயின்ரோடு பேரூர் செட்டிபாளையத்தில் நடக்கிறது. அன்றையதிம் 73 ஜோடிகளுக்கு திருமணம் நடக்கிறது. தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்குகிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.

இவ்விழாவுக்கான, கால்கோள் விழா நேற்று நடந்தது. அமைச்சர் எஸ்.பி.ேவலுமணி தலைமை தாங்கி, ஆரம்பக்கட்ட பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளையொட்டி, 73 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது. மணமக்களுக்கு 73 வகையான சீர்வரிசை வழங்கப்படுகிறது. இத்திருமணத்தை தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர்.

இத்திருமணத்தை நடத்தி வைப்பதில் பெருமை அடைகிறோம்.

தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற திருமண விழா நடைபெறும். ஜெயலலிதா மறைந்தாலும், அவர் மக்களுக்கு செய்த திட்டங்களை, மக்கள் நினைவுகூர்கிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பணியை தொடர்வார். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். விழாவில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் எட்டிமடை சண்முகம், வி.பி.கந்தசாமி, ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், முன்னாள் எம்.பி. ஏ.கே.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், ஒன்றிய தலைவர் மதுமதி விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: