3.41 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

கோவை, ஜன. 26: நாடு முழுவதும் போலியோ இல்லாத நிலையை உருவாக்க ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி மாதத்தில் நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டில் கடந்த 18-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த 16-ம் தேதி துவங்கியதால் போலியோ சொட்டு மருந்து முகாம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், ஒத்தி வைக்கப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 31-ம் தேதி நடக்கிறது. இதில், கோவை மாவட்டத்தில் 3 லட்சத்து 41 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

இதற்காக கிராமப்புறங்களில் 1,190 மையங்கள், நகர்ப்புறங்களில் 379 மையங்கள், 22 நடமாடும் மையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் உள்பட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 36 மையங்கள் என மொத்தம் 1,623 மையங்கள் அமைக்கப்படுகிறது. பொது சுகாதாரத்துறை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ரோட்டரி சங்கத்தினர், தன்னார்வலர்கள் என 6 ஆயிரத்து 536 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.   எனவே, பொதுமக்கள் அருகிலுள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகளில் அமைக்கப்படும் சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், வரும் 31-ம் தேதியன்று முகாமில் சொட்டு மருந்து போட்டுக்கொள்ளாத குழந்தைகளுக்கு பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் வீடுகளுக்கே நேரடியாக சென்று சொட்டு மருந்து வழங்கப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரமேஷ்குமார் கூறுகையில், “அரசால் குழந்தைகளுக்கு வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது. உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இதனால் குழந்தைகளுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. எனவே, 5 வயதிற்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயம் சொட்டுமருந்து போட்டுக்கொள்ள வேண்டும். ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் வரும் 31-ம் தேதி நடைபெறும் முகாமில் தவறாமல் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்.

Related Stories: