×

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிவு

சத்தியமங்கலம், ஜன. 26:  பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டதாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மாவட்ட பகுதிகளில் பெய்யும் மழையே அணையின் நீர்வரத்துக்கு பிரதானமாகும். நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் கடந்த ஜனவரி 7ம் தேதி 105 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்கு கீழ்பவானி வாய்க்காலில் சுழற்ச்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் திறப்பு நாளன்று, அணையின் நீர்மட்டம், முழு கொள்ளளவான 105 அடி, நீர் இருப்பு 24.9 டி.எம்.சி.யாகவும் இருந்தது.

அதன்பின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து சராசரியாக 400 கன அடியாக இருந்தது. இந்நிலையில் மழை குறைந்து வெயில் துவங்கியுள்ளதால், அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது.  நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 216 கன அடியாக இருந்தது.  அணையின் நீர்மட்டம் 98.29 அடியாகவும், நீர் இருப்பு 27.4 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து பவானி ஆற்றின் 200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Tags : Bhavanisagar Dam ,
× RELATED மின் உற்பத்திக்கு தண்ணீர் எடுப்பதால் பைக்காரா அணை நீர்மட்டம் சரிவு