×

குடியரசு தின விழா இன்று கொண்டாட்டம் குமரியில் 63 போலீசாருக்கு முதலமைச்சர் விருது கலெக்டர் தேசிய கொடி ஏற்றுகிறார்

நாகர்கோவில், ஜன.26 : குடியரசு தின விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, 63 போலீசாருக்கு முதலமைச்சர் விருது வழங்குகிறார். நாட்டின் 72 வது குடியரசு தின விழா இன்று (26ம்தேதி) கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில், நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில்  நடைபெறும் குடியரசு தின விழாவில் காலை 8.05க்கு, கலெக்டர் அரவிந்த் தேசிய ெகாடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.  இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி. பத்ரி நாராயணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் நேற்று காலை நடைபெற்றன. ஆர்.டி.ஓ. மயில், எஸ்.பி. பத்ரிநாராயணன் ஆகியோர் இதில் பங்கேற்றனர். போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகையையும் அவர்கள் பார்வையிட்டனர். கொரோனா பரவல் தடுப்பு காரணமாக இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் இல்லை. 63 போலீசாருக்கு முதலமைச்சர் பதக்கம், நற்சான்றிதழ் மற்றும்  பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

குடியரசு தின விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தின விழா நடைபெறும், மைதானத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மாவட்டம் முழுவதும் சுமார் 700 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதுடன்,  இந்திய கடல் பகுதியில் கடலோர காவல்படை சார்பில் நேற்று ரக்ஷா கிரீன் ஆபரேஷன் ஒத்திகையும் நடைபெற்றது. நேற்று மாலை முதல் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை தொடங்கியது. கன்னியாகுமரி, நாகர்கோவிலில் உள்ள லாட்ஜ்களிலும் சோதனை நடத்தப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் தீவிர சோதனை நடந்தது. ரயில்வே இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடமைகளையும் சோதனை செய்தனர். தண்டவாளங்கள், ரயில்வே பாலங்களிலும் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை நடந்தது.

Tags : Chief Minister ,Award Collector ,policemen ,Republic Day ,celebration ,Kumari ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...