×

ஐவிடிபி உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ₹8.60 லட்சம் கல்வி உதவித்தொகை

கிருஷ்ணகிரி, ஜன.26: கிருஷ்ணகிரி ஐவிடிபி தலைமை அலுவலத்தில், சுய உதவிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள விதவை பெண்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஐவிடிபி நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் பங்கேற்று, 86 பேருக்கு தலா ₹10 ஆயிரம் என ₹8.60 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘ஐவிடிபி தொண்டு நிறுவனம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் மேம்பாடு மட்டுமின்றி, அவர்களின் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியிலும் ஈடுபாடு கொண்டுள்ளது. ஐவிடிபி உறுப்பினர்களில் கணவரை இழந்து ஏழ்மையில் வாழும் உறுப்பினர்களின் குழந்தைகள் முந்தைய வருடத்தின் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த கல்வி உதவித்தொகை பெறும் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்கள் நன்றாக படித்து, வேலைக்கு சென்று அவர்களின் தாயை பேணிக்காப்பது அவசியம். அடுத்த ஆண்டு முதல் கணவரால் கைவிடப்பட்ட உறுப்பினர்களின் குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் இதுவரை ₹2.05 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது,’ என்றார். இந்நிகழ்ச்சியில் ஐவிடிபி நிர்வாகிகள் ஜோஸ்வா, நந்தினி ஜோஸ்வா மற்றும் அலுவலக பணியாளர்கள்  கலந்துகொண்டனர். .



Tags : children ,IVDP ,
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்