தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி, ஜன.26: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர்  ஜெயசந்திரபானு ரெட்டி, பேரணியை துவக்கி  வைத்தார். பேரணியில் மகளிர் சுய உதவிக்குழுவினர், வாக்காளர்  விழிப்புணர்வு குறித்து பதாகைகளை ஏந்தி சென்றனர். கிருஷ்ணகிரி  புதிய பஸ் நிலையத்தில் துவங்கி, லண்டன்பேட்டை ரவுண்டானா, பெங்களூரு சாலை  வழியாக புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பேரணி முடிந்தது. இதில்  வாக்காளர் விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக புதிய  வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் தேசிய வாக்காளர்  தினத்தையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில்,  கலெக்டர் தலைமையில் அலுவலர்கள், வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ சதீஸ், ஆர்டிஓ கற்பகவள்ளி, கலெக்டரின் நேர்முக  உதவியாளர் (பொது) ரகுகுமார், டிஎஸ்பி சரவணன், தாசில்தார்கள் வெங்கடேசன்,  பாலசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள், சுய உதவிக்குழுவினர், மாணவ, மாணவிகள்  கலந்துகொண்டனர். தேன்கனிக்கோட்டை:  இதேபோல், தேன்கனிக்கோட்டையில் தாலுகா அலுவலகம் முன் நடைபெற்ற பேரணியை ஓசூர் ஆர்டிஓ  குணசேகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தேன்கனிக்கோட்டை தாசில்தார்  ராமச்சந்திரன், துணை தாசில்தார்கள், ஆர்ஐகள், விஏஓக்கள், வருவாய்துறை அலுவலர்கள், ஐசிடிஎஸ் பணியாளர்கள் கலந்து கொண்டு  பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக பஸ்நிலையம் வரை சென்றனர்.

Related Stories: