×

ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி கே.பி.முனுசாமிக்கு இல்லை

கிருஷ்ணகிரி, ஜன.26: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி கே.பி.முனுசாமிக்கு இல்லை என செங்குட்டுவன் எம்எல்ஏ தெரிவித்தார். கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி ஊராட்சி குமரன் மகால் அருகில், பிப்ரவரி 1ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான விழா பந்தல் அமைக்க, அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ, மாவட்ட துணை செயலாளர் வேப்பனஹள்ளி முருகன் எம்எல்ஏ, ஓசூர் மாநகர செயலாளர் சத்யா எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். பணிகளை தொடங்கி வைத்து செங்குட்டுவன் எம்எல்ஏ, செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாலக்கோடு தொகுதியில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆழியாளம் தடுப்பணையில் இருந்து தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் வழங்கும் திட்டம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணிஒட்டில் தடுப்பணை கட்டி வலது, இடதுபுற கால்வாய் வெட்டி, பெரிய ஏரி, படேதலாவ் கால்வாய் உள்பட வலதுபுற கால்வாய் வெட்டும் திட்டங்கள் 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்பியின் எஸ்டேட் வழியாக கால்வாய் செல்வதால், அதிகார பலம் மூலம் தடுக்கப்பட்டுள்ளதாக பேசினார். இதற்கு பதிலளித்த கே.பி.முனுசாமி, மு.க.ஸ்டாலின் குறித்து அநாகரீக வார்த்தைகளால் பேசியது, அவர் வகிக்கும் பொறுப்பிற்கு சற்றும் பொருந்தாது. மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி அவருக்கு கிடையாது. கே.பி.முனுசாமிக்கு இந்த மாவட்ட மக்கள் மீதும், விவசாயிகள் மீது துளி கூட அக்கறை இல்லை. ஆழியாளம் அணை, போடூர், ராமாபுரம், பாத்தகோட்டா, உத்தனப்பள்ளி வரை வந்த சர்வே பணிகள், அயர்னப்பள்ளி அருகில் உள்ள அவருக்கு சொந்தமான 80 ஏக்கர் நிலம் வரை மட்டுமே வந்து, அதற்கு மேல் போகாமல் திட்டப்பணிகள் ஏன் நின்று போனது?. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், வெற்றிச்செல்வன், யுவராஜ், ராஜேந்திரன், ஜெயராமன், தம்பிதுரை, சுகுமாரன், மணிமேகலை நாகராஜ், நாகராஜ், சாவித்திரி கடலரசுமூர்த்தி, கோவிந்தன், கோவிந்தசாமி, பாபு, அஸ்லம், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : KP Munuswamy ,Stalin ,
× RELATED ஒழுக்கமான கட்சிக்கு பயம் ஏன்? எங்களை...