சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ’உங்கள் கனவை சொல்லுங்கள்’ என்ற புதிய திட்டம் குறித்து முதலமைச்சர் கூறினார். ஒவ்வொரு குடும்பங்கள் சார்ந்து ஒரு திட்டங்கள் இருக்கும். அவர்களின் கனவை தெரிவிக்கும் வகையில், ’உங்கள் கனவை சொல்லுங்கள்’ என கருத்துக்கேட்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. ஒவ்வொரு குடும்பமும் சார்ந்து ஒரு கனவு இருக்கும். தனக்கு என்ன வேண்டும், தன்னுடைய ஊருக்கு என்ன வேண்டும். தன்னுடைய நாட்டுக்கு என்ன வேண்டும். உதாரணத்திற்கு, வெளிநாட்டிற்கு செல்லும்போது, நாம் ஒப்பிட்டுப் பார்த்து சொல்வோம். சாலைகள் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கிறது.
ஆனால், அதுபோன்று என்னுடைய ஊர் வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அரசாங்கம் சார்ந்த திட்டங்கள் அதன் கொள்கையைச் சார்ந்து போய்க் கொண்டிருக்கும். என்னுடைய மாநிலம் எப்படி இருக்கவேண்டும் என்றால் என்று ஆசைப்படலாம். உங்க கனவு சொல்லுங்கள் என்பது ஒரு குடும்பத்தைச் சார்ந்தது என்று தமிழ்நாடு முதலமைச்சர் இதை செய்திட வேண்டும். கேட்டிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். கிட்டத்தட்ட 1 கோடியே 91 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றது. கிட்டத்தட்ட 24 ஆயிரம் குடியிருப்புகள் இருக்கின்றது. உங்க கனவு சொல்லுங்கள் திட்டம் என்பது ஒரு குடும்பத்தின் கனவாக என்னவாக இருக்கின்றது.
இதுவரை யாரும் செய்யாத நிகழ்வாக, உங்கள் கனவை கூறும் வகையில் வரலாற்று திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் தொடர்பான ஒரு படிவத்தில் 10 திட்டங்கள் இடம் பெற்றிருக்கும். இதில் மக்கள் முத்தாய்ப்பாக நினைக்கும் 3 திட்டங்களை கூறச்சொல்வோம். வீடு, குடும்பம், மாவட்டம் சார்ந்த கருத்துகளை தனிநபர் தெரிவிக்கும் வகையில் திட்டம் செயல்படும். இந்த திட்டத்தின் மூலம் 2030க்கும் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்ற ஒரு மிஷினரி டாக்குமெண்டை உருவாக்க முடியும் என முதலமைச்சர் கருதுகிறார்.
பல்வேறு திட்டங்கள், இளைய சமுதாயம் சார்ந்த, மாணவர்களை சார்ந்த, கல்லூரி மாணவர்களை சார்ந்து நாம் செய்து கொண்டிருக்கும்போது, அவர்களுக்கென்று ஒரு கனவு இருக்கும். அந்த கனவு என்னவாக இருக்கப் போகிறது? என்பதை நாங்கள் கேட்கப் போகிறோம். அவர்களுக்கு விண்ணப்பம் வழங்கப் போகிறீர்களா? இல்லை – இணையதளத்தின் மூலமாக என்ன தேவை என்பதெல்லாம், 500 வாகனங்கள் மூலமாகவும், ஊடகம் சார்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பத்திரிகை செய்தியின் மூலமாக எடுத்துச் செல்வது என்று எல்லோரிடமும் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப் போகிறோம்.
நம்முடைய ஊரில் படித்துவிட்டு, வெளிநாட்டிற்கு சென்று ஒரு தொழிலதிபாரக இருக்கக்கூடிய அயலகத்தில் தமிழர்கள் இருப்பார்கள். இந்த ஜனவரி மாதம் 12ம் தேதி அயலக தினம் நாம் கொண்டாடப் போகிறோம். பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கலந்து கொள்வார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் எல்லாம் பல்வேறு நாடுகளிலிருந்து கலந்து கொள்ளும்போது, அவர்களுடைய கனவெல்லாம் என்னவாக இருக்கின்றது? அதற்காக தனியாக 5 பேர் கொண்ட தன்னார்வலர்கள் மூலமாக, நடைபெறுகின்ற அந்த கருத்தரங்கத்தில் நம்முடைய முதலமைச்சர், துணை முதலமைச்சரிடம் முழுமையாக அதனை வழங்குவார்கள்.
என்னுடைய கனவு – நான் இருந்த ஊர், நான் செட்டில் ஆனாலும் கூட என்னுடைய ஊர் இது போன்று இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அந்த கனவை எல்லாம் முழுமையாக நாங்கள் எடுத்துக் கொள்ளப்போகிறோம். 15 வயது முதல் 29 வயது வரை இருக்கக்கூடிய இளைய சமுதாயத்தைப் பொறுத்தவரை “நான்கு கருத்துகளை அவர்களிடம் கேட்கப்போகிறோம். அதில் குறுகிய காலத்தில் இரண்டை முதலில் செய்யுங்கள். இதை நாங்கள் உங்களிடம் எதிர்ப்பார்க்கிறோம். எங்களுடைய கனவாகப் பார்க்கிறோம். 2030-க்குள் செய்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று சொல்லும் அளவிற்கு அந்த இளைய சமுதாயத்திடமிருந்து இதை நாங்கள் பெற இருக்கிறோம்.
இது வருகிற 9ம் தேதி திருவள்ளுவர் மாவட்டம், பொன்னேரியில் முதலமைச்சர் “உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் இது தொடர்ந்து நடைபெறும். 9ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் வரை 30 நாட்கள் கண்டிப்பாக ஒவ்வொரு குடும்பத்தையும் சென்று பார்க்கக்கூடிய அளவிற்கு எங்களுடைய அதிகாரிகள் தன்னார்வலர்களை தயார்படுத்தி வைத்திருக்கிறோம். வருகிற 11ம் தேதி முதல் நம்முடைய இளைய சமுதாயம் நான் சொன்னது போல் அந்த இணையதளத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துவிடுவோம்.
அயலகத் தமிழர்கள் என்று வரும்போது, 12ம் தேதி முதல் அந்த கருத்துகளை உள்வாங்க இருக்கிறோம். 9ம் தேதி முதல் பிப்ரவரி வரை 30 நாட்களில் நான் சொன்ன மற்ற, அந்த மாவட்டம் சார்ந்த “என் ஊரு என் கனவு” ஆக இருந்தாலும் சரி, அல்லது கருப்பொருட்கள் சார்ந்து நடைபெறும் கருத்தரங்கம் சார்ந்ததாக இருந்தாலும் சரி. இந்த ஒரு மாதத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அங்கே இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் மூலமாக இதை நடத்த இருக்கிறார். ஆகவே, ஒரு வரலாற்றில் மிகப்பெரிய ஒரு திட்டமாக நம்முடைய மக்களிடமிருந்தே அதை கேட்டுக்கொண்டு அது மக்களுக்கு எப்படி ஒரு திட்டமாக கொண்டு செல்லலாம். இவ்வளவு செய்துவிட்டோம். ஆனாலும், இன்னமும் மக்களுக்கு ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்பு இருந்துகொண்டுதானே இருக்கும். அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கு ஒரு திட்டத்தை உருவாக்கலாமே எனும் விதத்தில்தான் மீண்டும் அந்த கருத்தை கேட்கும் நிகழ்வாகத்தான் இந்த நிகழ்வை பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
