சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் வரும் 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறி படத்துக்கு தணிக்கை சான்று வழங்குமாறு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று காலை தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு ஆஜராகி, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.
இதை ஏற்ற நீதிபதி, விசாரணை மதியம் நடைபெறும் என்று தெரிவித்தார். இதையடுத்து மதியம் விசாரணை தொடங்கியது. அப்போது, பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி, 500 கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் கடந்த டிசம்பர் மாதம் சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை ஆய்வு செய்த சென்சார் போர்டு, சில காட்சிகளை நீக்கவும், வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியது. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்து படம் மீண்டும் சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மீண்டும் படத்தை ஆய்வு செய்த சென்சார் போர்டு, படம், யு/ஏ சான்று பெற தகுதி உள்ளது என்று சென்சார் போர்டு தலைவருக்கு பரிந்துரைத்தது. இந்த நிலையில், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக படத்துக்கு எதிராக புகார் வந்துள்ளதாகக் கூறி படத்தை மறு ஆய்வு குழுவுக்கு சென்சார் போர்டு அனுப்பி வைத்தது. இந்த படத்தை சென்சார் போர்டு உறுப்பினர்கள் தவிர ஒருவரும் பார்க்காத நிலையில் எப்படி புகார் அளிக்கப்பட்டது? எனவே, படத்துக்கு சான்று வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
சென்சார் போர்டு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக புகார் வந்ததால் மறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் சான்று வழங்க வேண்டும் என்று சென்சார் போர்டை நிர்பந்திக்க முடியாது என்று வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, படத்துக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை நாளை (இன்று) தாக்கல் செய்யுமாறு சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்த போது, ரிலீஸ் தேதியை முடிவு செய்தாலும் சட்டப்படி தான் செல்ல முடியும். சென்சார் போர்டு அறிவுறுத்தல்களை பெற வேண்டும் என்று சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, படத்தை ஏன் 10ம் தேதி தள்ளி வைக்க கூடாது? தை பிறந்தால் வழி பிறக்குமே? என்று பட தயாரிப்பு நிறுவனம் தரப்பிடம் நீதிபதி கூறினார். அதற்கு, படம் வெளியாகும் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து இன்று மதியம் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
