தஞ்சை அருகே பொங்கலுக்காக வீடுகள் தோறும் இலவச அகப்பை: 200 ஆண்டாக தொடரும் பாரம்பரியம்

 

 

வல்லம்: தமிழகத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மண்பானையில் புதிதாக அறுவடை செய்த நெல்லில் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு படைப்பர். பொங்கலிடும்போது சாதத்தை கிளறுவதற்கு தேங்காய் கொட்டாங்குச்சியால் தயாரிக்கப்பட்ட அகப்பையை முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த அகப்பையை பயன்படுத்தும்போது அதன் மணமும், பொங்கல் சுவையும் அதிகரிக்கும். காலப்போக்கில் சில்வர், பித்தளை கரண்டிகள் பயன்பாட்டால் அகப்பை காணாமல் போனது. ஆனால் பழமை மாறாமல் தஞ்சை மாவட்டம் வேங்கராயன்குடிக்காடு மக்கள் இன்றும் பொங்கல் பண்டிகையன்று அகப்பையை பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்காக அந்த ஊரை சேர்ந்த தச்சு தொழிலாளர்கள் அகப்பையை தயாரித்து பொங்கல் தின அதிகாலையில் வீடு வீடாக சென்று இலவசமாக மக்களிடம் வழங்குவர். மாறாக ஒருபடி நெல், தேங்காய், வெற்றிலை- பாக்கு மட்டும் பெறுவர். இந்த வழக்கம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து அகப்பை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கணபதி(53), விஸ்வநாதன்(57) கூறுகையில், 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பொங்கல் அகப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக கொட்டாங்குச்சியை 5 நாட்கள் தண்ணீரில் ஊற வைத்து அதை உளியால் பக்குவமாக செதுக்கி, மூங்கில் மரத்தில் கைப்பிடி தயாரித்து இணைப்போம்.

அகப்பைக்கு பயன்படுத்தப்படுவது முக்கண் உள்ள கொட்டாங்குச்சிகள் மட்டுமே. பொங்கலன்று இலவசமாக மக்களுக்கு கொடுப்போம். இந்த பாரம்பரியம் இன்றளவும் தொடர்கிறது. உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அகப்பையை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம் என்றனர்.

Related Stories: