செல்போன் டவரில் ஏறி மிரட்டல் 3 மணி நேரத்தில் முதியவர் மீட்பு

கடையநல்லூர், ஜன. 26: கடையநல்லூர் அருகே இடைகால் அடுத்த நயினாரகத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குலசேகர அம்மன் கோயிலில் குறிப்பிட்ட ஒரு கோஷ்டியினர் செல்ல கடந்த 4 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கோஷ்டியைச் சேர்ந்த குலசேகரன் என்ற பாக்யராஜ் (57) இக்கோயில் திருவிழாவுக்கான கால் நாட்டு இன்று நடைபெற உள்ள நிலையில் இடைகாலில்  உள்ள தனியார் செல்போன் கோபுரத்தில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.  தகவலறிந்த அச்சன்புதூர் போலீசார், தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் கவிதா,  உதவி அலுவலர் வெட்டும் பெருமாள் மற்றும் வீரர்கள், ஆய்க்குடி ஆர்ஐ வீரலட்சுமி உள்ளிட்டோர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன்,  செல்போன் மூலம் பேசி சமரசப்படுத்தினார். 3 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு இதை குலசேகரன் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான வீரர்கள் சண்முகசுந்தரம், மாரிமுத்து, ரத்தினகுமார், முருகன், மாரிக் குமார், மணிகண்டன், சித்தன், மகேஷ், ஆனந்த் விஜய் ஆகியோர் செல்போன் டவரில் ஏறி பாக்கியராஜை கயிறு கட்டி பத்திரமாக  மீட்டனர்.

Related Stories: