×

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜன.31ல் 1221 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்

தூத்துக்குடி,ஜன.26: தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 31ம் தேதி போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் 1221 மையங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமில்  ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 537 குழந்தைகள் பயன்பெற உள்ளனர் என கலெக்டர் தெரிவித்தார்.தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்துதல் தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:  தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 537 குழந்தைகள் பயன்பெற உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1221 மையங்கள் செயல்படவுள்ளன.

நடமாடும் மருத்துவக்குழு மூலமாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கியபொது இடங்களிலும் மேலும் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பணிநிமித்தமாக இடம் பெயர்ந்து வருபவர்களில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மையங்கள் அமைத்து போலியோ சொட்டுமருந்து வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொதுசுகாதாரத்துறை அங்கன்வாடி பணியாளர்களுடன் பிறதுறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் எண் 5164 பணியாளர்கள் பணியாற்றவுள்ளனர். இப்பணிகளுக்கு134 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. எனவே அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும் 31.01.2021 அன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் முககவசம் அணிவதுடன் சமூக இடைவெளியையும் கடைபிடித்து தவறாமல் போலியோ சொட்டுமருந்து போட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Polio vaccination camp ,Thoothukudi district ,
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்