திருவண்ணாமலை, ஆரணியில் வரும் 29ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தகவல் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் பயணம்

திருவண்ணாமலை, ஜன.26: ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பயணத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்களை நேரில் பெறுகிறார். இதுகுறித்து, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருப்பதாவது: உங்கள் பிரச்னைகளை தீர்ப்பதே எனது முதல் பணி, எனது அரசின் முதல் 100 நாட்கள் போர்கால அடிப்படையில் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு உங்கள் மு.க.ஸ்டாலின் எனும் முழக்கத்துடன், புதிய பயணத்தை வரும் 29ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பயணத்தின் தொடக்கமாக, வரும் 29ம் தேதி காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை திருவண்ணாமலை- திருக்கோவிலூர் ரோடு, நகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள, கலைஞர் அரங்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் நேரடியாக குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுக்களை பெறுகிறார். அதைத்தொடர்ந்து, அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில், ஆரணி அடுத்த சேவூர் கிராமம், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் அமைந்துள்ள அண்ணா அரங்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் நேரடியாக குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுக்களை பெறுகிறார். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும் மனுக்களாக நேரடியாக அளித்து, ஆட்சி மாற்றத்திற்கான அத்தியாயத்தை உருவாக்குங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: