சென்னை: சுகாதாரம், கல்வி, குடிநீர், மின்சாரம் விநியோகம், வேலை வாய்ப்பு ஆகிய நிலையான வளர்ச்சிக்கான குறியீடுகளில் தேசிய சராசரியைத் தமிழ்நாடு விஞ்சியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாநில திட்டக் குழு அளித்த ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட (1) சுற்றுச்சூழல் அமைப்புச் சேவைகளின் பொருளாதார மதிப்பீடு – தமிழ்நாட்டின் முன்னுரிமை அளிக்கப்பட்ட 61 ஈரநிலங்கள்/நீர்நிலைகள் பற்றிய ஆய்வு (2) தமிழ்நாட்டின் புறநகர் பகுதிகளின் அமைப்பு மற்றும் நிலையான புறநகர் மேலாண்மை கட்டமைப்பை மேம்படுத்துதல் (3) முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரமிடுதல் மீதான மதிப்பீட்டாய்வு (4) தமிழ்நாட்டின் வளர் இளம் பெண்களிடையே நீடிக்கும் இரத்த சோகை.
செயல்பாட்டு இடைவெளிகளும் பாதிப்புகளும் ஆகிய நான்கு அறிக்கைகளை மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினார். இந்த ஆய்வறிக்கையில் நிலையான வளர்ச்சிக்கான குறியீடுகளில் தேசிய சராசரியைத் தமிழ்நாடு விஞ்சியுள்ளது என மாநில திட்டக் குழு ஆய்வறிக்கையில் தகவல் தெரிவித்தது. தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை இந்தியாவிலேயே அதிகபட்சமாக 47%ஆக உள்ளது. ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தேவைப்படுவோருக்கு 100% வேலை வழங்கப்படுகிறது.கிராமப் புறங்களில் உள்ள வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் 81.87%ஆக உள்ளது. இது தேசிய சராசரியை விட அதிகம். 50%க்கு மேல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டுடன் 100% வீடுகளுக்கு மின் இணைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.வேலையின்மை விகிதம் தேசிய சராசரியை விட குறைவாக 4.8%ஆக உள்ளது இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
