காவல் நிலையத்தில் டிஎஸ்பி விசாரணை சேத்துப்பட்டு மக்கள் மகிழ்ச்சி கடத்தல் மணலை போலீஸ் விற்ற புகார்

பெரணமல்லூர், ஜன.24: வருவாய்த்துறை ஒப்படைக்கும் மணலை விற்று காசாக்கியது தொடர்பாக, சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் நேற்று டிஎஸ்பி அறிவழகன் போலீசாரிடம் விசாரணை நடத்தினார். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ஓதலவாடி கிராமம் வழியே செய்யாற்று படுக்கை செல்கிறது. இந்த ஆற்றுப்படுக்கை மணல் கடத்தும் கும்பலால் நாள்தோறும் சிதைக்கப்பட்டு வந்தது. இந்த கும்பல் சேத்துப்பட்டு போலீசாருக்கு உரிய கட்டிங்கை கொடுத்து மணலை கடத்தி வந்தது. இதையறிந்தும் பொதுமக்கள் எதுவும் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். மேலும், அவ்வப்போது பொதுமக்கள் கூறும் தகவலின்பேரில் வருவாய்த்துறையினர் ரோந்து சென்று மணலுடன் மாட்டுவண்டி, டிராக்டர், லாரி போன்ற மணல் கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்து வந்தனர். ஆனால், வருவாய்துறையினர் பறிமுதல் செய்த மணலை போலீசார் விற்று வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் விரிவான செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்து, மணல் விற்றதில் தொடர்புடையதாக கூறப்படும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை, எஸ்பி விசாரணைக்கு அழைத்த நிலையில், போளூர் டிஎஸ்பி அறிவழகன் நேற்று மாலை சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று போலீசாரிடம் கிடுக்குப்பிடி போட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு வெளியே நின்றிருந்த வாகனங்களில் கடத்தல் மணல் இல்லாமல், வாகனங்கள் மட்டும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

டிஎஸ்பி அளிக்கும் விசாரணை முடிவை பொறுத்து, மாவட்ட காவல் துறை மணல் கடத்தலில் காசு பார்த்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிய வருகிறது. இதனால் சேத்துப்பட்டு பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

>