×

பைக்குகள் மோதி பெயின்டர் பலி 3 பேர் படுகாயம் கீழ்பென்னாத்தூரில்

கீழ்பென்னாத்தூர், ஜன.24: கீழ்பென்னாத்தூரில் பைக்குகள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெயின்டர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் பீட்டர்(47), பெயின்டர். அதே பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை(30). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு, ஒரே பைக்கில் திருவண்ணாமலையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தபால் நிலையம் எதிரே சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த மற்றொரு பைக் திடீரென, இவர்களது பைக் மீது நேருக்குநேர் மோதியது. இதில் பீட்டர், ஏழுமலை மற்றும் மற்றொரு பைக்கில் வந்த கீழ்பென்னாத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த பிரபு மகன் வெற்றி(17), தயாநிதி மகன் லட்சுமணன்(17) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பீட்டர் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : painter ,
× RELATED வழிப்பறியில் ஈடுபட்ட 6 வாலிபர்கள் கைது: 2 பைக், செல்போன்கள், நகை பறிமுதல்