திமுக அரசு அமைந்தால்தான் மக்களுக்கு பாதுகாப்பு வேலூரில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி: மத்திய அரசின் எடுபிடி அதிமுகவை அகற்ற வேண்டும்

வேலூர், ஜன.24: திமுக அரசு அமைந்தால்தான் மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என வேலூரில் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். வேலூரில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், டீசல், பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே போகிறது. இதன்மூலம் ₹19 லட்சம் கோடி வருவாயை மத்திய அரசு ஈட்டியுள்ளது. டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ளது. அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு விவகாரத்திற்கு தடைபோடும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்கும் வகையில் மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மத்திய அரசின் வேளாண் மற்றும் தொழிலாளர்கள் சட்டத்திற்கும், தேசிய கல்விக்கொள்கை சட்டத்திற்கும் மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மத்திய அரசுக்கு எடுபிடி அரசாக உள்ள அதிமுக அரசை அகற்ற வேண்டும். திமுக அரசு அமைந்தால்தான் மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் பிரச்னை தொடர்பாக இலங்கை அரசு, மத்திய, மாநில அரசுகள், குழுவை அமைத்து பிரச்னையை தீர்க்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் தடுப்பணை கட்டவேண்டும். ஸ்மார்ட் சிட்டியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: