அண்ணாமலை பல்கலை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் விடுதியில் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிப்பு

சிதம்பரம், ஜன. 24: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் 46வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், விடுதியில் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவித்து விட்டு அரசு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. அதற்கு மாறாக பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் 46வது நாளாக நேற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3 தினங்களாக காலவரையற்ற போராட்டத்தை துவக்கி உள்ள நிலையில் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டது. குமாரராஜா முத்தையா விடுதியில் மின்சாரத்தையும், குடிநீரையும் துண்டித்ததைக் கண்டித்து மருத்துவ மாணவர்கள் விடுதி வாயிலின் முன் தரையில் அமர்ந்து காலி பக்கெட்டுகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சிறிது நேரத்தில் மகளிர் விடுதியிலும் குடிநீர் மற்றும் மின்சார இணைப்பை நிர்வாகத்தினர் துண்டித்தனர். இதைக்கண்டித்து பெண் மருத்துவர்களும் விடுதி வாயிலில் காலி பக்கெட்டுகளுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த சில நிமிடங்களிலேயே பல்கலைக்கழக மருத்துவமனைக்கு வரும் பின்புற நுழைவு வாயிலை நிர்வாகத்தினர் பூட்டினர். இதைக்கண்டித்து ஒரு பிரிவு மாணவர்கள் நுழைவு வாயிலின் முன்பும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கல்லூரிக்கு நிர்வாகம் காலவரையற்ற விடுமுறை அறிவித்து, விடுதிகளை விட்டு மாணவர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டு  இருந்தது. ஆனாலும் மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேறாமல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது மின்சாரம் மற்றும் குடிநீர் துண்டிக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். உணவு இல்லாததால் மாணவர்கள் வெளியில் இருந்து உணவை வாங்கி வந்து போராட்ட பந்தலில் சாப்பிட்டு விட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இது குறித்து மாணவர்கள் கூறுகையில், கொரோனா பணியில் இருந்த எங்களை கொரோனா வழிகாட்டுதல் விதிமுறைகளின்படி பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி அதன் பிறகுதான் அனுப்ப வேண்டும். விடுதிக்கும் உணவுக்கும் முழுமையாக கட்டணம் செலுத்தும் நிலையில் எங்களை வெளியேற்றும் நாட்களுக்குரிய தொகையை மீண்டும் தங்களிடமே வழங்க வேண்டும். மேலும் விடுதியில் நெருக்கடி ஏற்படுத்துவதால் தங்கள் வெளியில் சென்றுதான் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு இதில் உறுதியான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு மாணவர்களை காப்பாற்ற வேண்டும், என்றனர். இதற்கிடையே பல்கலைக்கழக விடுதிகளில் நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கண்டித்தும், இந்த விவகாரத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குறிப்பிட்டு மாணவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>