3 மாதத்திற்கு முன் திறக்கப்பட்ட தடுப்பணையில் உடைப்பு தண்ணீர் வெளியேற்றம்

பண்ருட்டி, ஜன. 24:  பண்ருட்டி அருகே 3 மாதத்திற்கு முன் திறக்கப்பட்ட தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டதால் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை அதிகாரிகள் வெளியேற்றினர். இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் - தளவானூர் இடையே தென்பெண்ணையாற்றில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் ரூ.25.17 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது. கடந்த 3 மாதத்திற்கு முன் இந்த தடுப்பணை திறக்கப்பட்டு  பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது பெய்த கனமழையால் தடுப்பணை நிரம்பியது. இதனால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீராதாரம் உயர்ந்தது.  முதன்முதலாக கட்டி முடித்த தடுப்பணையில் நீர் தேங்கியது கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் எனதிரிமங்கலம் பகுதியில் உள்ள தடுப்பணையின் ஷட்டர் பகுதியில் சுமார் 15 அடி ஆழத்தில் இருந்து திடீரென 20மீ. தாண்டி தண்ணீர் குபீர் குபீர் என வெளியேறியது. நேரம் ஆக ஆக வெளியேறும் தண்ணீர் வேகம் அதிகரித்தது.

இதனால் கரைபகுதிகளில் விரிசல் ஏற்பட்டது. திடீரென 10 அடி ஆழம் 15 அடி நீளம் அளவில் மெகா பள்ளம் ஏற்பட்டது.  தகவலறிந்த விழுப்புரம் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் உதவி செயற்பொறியாளர் சுமதி, உதவி பொறியாளர் ஞானசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தடுப்பணையை ஆய்வு செய்தனர்.  அப்போது நீர் கசியும் பகுதியில் ஆற்றிலேயே மணல் மற்றும் களிமண்ணை எடுத்து வந்து கொட்டி பார்த்தனர். ஆனால் நீர் வெளியேற்றம் நின்றபாடில்லை. பின்னர் உயரதிகாரிகள் அறிவுரைப்படி, 3 ஷட்டர்களும் திறந்து விடப்பட்டு தேங்கிய அனைத்து நீரையும் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் முழுவதும் பெண்ணையாற்றில் வெளியேறி வருவதால் கரையோர விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தடுப்பணையின் கரைபகுதிகளும் சரிவர உறுதிப்பாடில்லாத வகையில் உள்ளதாகவும், ஷட்டர் அடியில் கான்கிரீட்கள் தரமாக போடப்படாததால் மண் அரிப்பு ஏற்பட்டு இந்த நிலை உருவாகியதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: