தேசிய பேரிடர் மீட்பு திட்டத்தில் தன்னார்வலர் தேர்வு ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி, ஜன.24: இயற்கை பேரிடர் காலங்களில் தன்னார்வலர்கள் இணைந்து பொதுமக்களை காக்கும் பணியில் ஈடுபட வேண்டுமென்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய இணை செயலாளர் ரமேஷ்குமார் கண்டா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் தடுப்பு தொடர்பாக தன்னார்வலர்களை தேர்வு செய்தல், பயிற்சி அளித்தல் தொடர்பான விளக்க கூட்டம் நேற்று நடந்தது. எஸ்பி ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய இணைச்செயலாளர் ரமேஷ்குமார் கண்டா தலைமை வகித்து ஆப்த மித்ரா திட்டம் பற்றிய கையேட்டினை வெளியிட்டார். அதனை கலெக்டர் செந்தில்ராஜ் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆப்த மித்ரா திட்டத்தில் புயல், தொடர் மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் அவற்றில் சிக்கும் மக்களை பாதுகாப்பதற்கான தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பேரிடர் காலங்களில் தன்னார்வலர்கள் தீவிரமாக களப்பணியாற்றி  மக்களை காப்பாற்றும் பணிகளை மேற்கொள்வார்கள். இத்திட்டம் தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்களில் துவங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் தேசிய மாணவர் படையினர், என்.சி.சி மாணவர்கள், நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள் உள்ளிட்ட 5ஆயிரம் பேர் சேர்க்கப்படுவார்கள்.

இத்திட்டத்தில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் சென்னை மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அந்தந்த மாநிலங்களில் கூடுதல் பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டம் அடுத்த மாதம் முதல் தொடங்கப்படவுள்ளதால், தன்னார்வலர்கள் இணைந்து இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட வேண்டும் என்றார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் விஷ்ணுசந்திரன், சப்கலெக்டர் சிம்ரன்ஜித்சிங் காலோன், உதவி கலெக்டர்(பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதா, ஆர்டிஓக்கள் கோவில்பட்டி விஜயா, திருச்செந்தூர் தனப்பிரியா, பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வபிரசாத் மற்றும் கடலோர காவல் படையினர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: