×

தொடர் மழை, பனி மூட்டம் எதிரொலி பசுந்தேயிலை வரத்து சரிவு

மஞ்சூர், ஜன. 24: நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் தேயிலை விவசாயம் முக்கியத்தொழிலாக உள்ளது. இதையொட்டி மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்குநாடு, நஞ்சநாடு உள்பட மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இது தவிர 100க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் எஸ்டேட்டுகளுக்கு சொந்தமான  தொழிற்சாலைகளும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக குந்தா பகுதியில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்கு உரமிடுதல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் தேயிலை மகசூல் பெருமளவு அதிகரித்தது.

கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் தினமும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கிலோ வரை பசுந்தேயிலை வரத்து இருந்தது. தேயிலைத்தூள் உற்பத்தியும் அதிகரித்தது.    இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பனி விழத்துவங்கியது. ஆரம்பத்தில் சில நாட்கள் பனியின் தாக்கம் அதிகரித்ததால், தேயிலை தோட்டங்களில் செடிகள் கருக தொடங்கியது. இந்நிலையில் காலநிலை மாற்றம் மற்றும் புயல் காரணமாக டிசம்பர் மாதம் முதல் இந்த மாதம் ஜனவரி வரை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதில், சூரிய வெளிச்சம் தெரியாத அளவிற்கு நீண்ட நாட்கள் நீடித்த தொடர் மழை மற்றும் பனி மூட்டத்தால் தேயிலை மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. பனியின் தாக்கத்தால் செடிகளில் கொப்புளநோய் தாக்குதலும் ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED சென்னையில் கலப்பு ஹாக்கி: ஹரிதாஸ் அணி கோல் மழை