×

மத்திய அரசின் புதிய திட்டத்தால் காங்கயம் பகுதி அரிசி ஆலைகளுக்கு ஆபத்து

காங்கயம், ஜன.24: தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி செயலர் கார்த்திகேய சிவசேனாபதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:  2019-20ம் ஆண்டில் இருந்து அடுத்த மூன்று ஆண்டுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை நாடு முழுவதும் விநியோகிக்க மத்திய அரசுத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், செறிவூட்டப்பட்ட அரிசியை 2019-20ம் ஆண்டில் இருந்து அடுத்த 3 ஆண்டுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத் உள்பட தேர்ந்தெடுக்கப்பட்ட 15 மாநிலங்களில் தலா ஒரு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்குச் சோதனை முறையில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குப் புரதச் சத்து குறைபாட்டை நீக்கவே இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு கூறி வருகிறது. உண்மையில் பா.ஜ. ஆளும் வட மாநிலங்கள் குறிப்பாக, கோதுமையை முதன்மை உணவாக எடுத்துக்கொள்ளும் மக்களுக்குத்தான் புரதச்சத்து குறைபாடு அதிகமுள்ளது.
இத்திட்டத்தைக் கோதுமையில் இருந்து தொடங்காமல், ஏன் அரிசியில் உங்கள் கவனத்தைத்  திருப்புகிறீர்கள்.

தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் காங்கேயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் சிறு, குறு மற்றும் பெரிய அளவிலான அரிசி ஆலைகள் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. காங்கேயம் பகுதியின் தட்பவெப்ப நிலை மற்றும் சூழல் யாவும் இத்தொழிலுக்கு உகந்ததாக உள்ளதால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் காங்கேயத்திலுள்ள அரிசி ஆலைகளுக்கு வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காங்ேகயம் பகுதிகளில் சாமானியர்களைத் தொழில் அதிபர்களாக மாற்றிய மிக முக்கியத் தொழிலாக, அரிசி ஆலைத் தொழில் இருந்து வருகிறது. இதன் மூலம் பலருக்கும் இந்தப் பகுதியில் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.

ஆனால், தற்போது மத்திய அரசு கொண்டு வரும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் என்பது இத்தொழிலை அம்பானி, அதானி நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் செயலாகும். ஏனெனில்  இவ்வாறான அரிசியை உற்பத்தி செய்யும்போது அதிகப்படியான பொருள் செலவும், முதலீடும் தேவைப்படும். இதனை உள்ளூர் அரிசி ஆலை உரிமையாளர்கள் எவ்வாறு தாங்குவார்கள்? எனவே, 300-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வரும் காங்கேயத்தின் பிரதான தொழிலை அழித்து விடாமல், இதனை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்காமல் இந்த சட்டத்தை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : area ,Kangayam ,Central Government ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...