×

மக்களை அரவணைத்து செல்பவராக நாட்டின் தலைவர் இருக்க வேண்டும்

திருப்பூர், ஜன.24: திருப்பூர் பல்லடம் ரோட்டில் நேற்று நடந்த ‘உழைப்பாளர்களின் உரிமையை மீட்போம்’ கருத்தரங்கில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு அகில் இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பதிலளித்து பேசியதாவது: நாட்டில் குறைந்தபட்ச ஊதியம் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அரசு அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும். வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை.
தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டமானது கிராமப்புறத்தில் மட்டுமின்றி, நகர்புறத்திலும் கொண்டு வரப்படும். பெண்கள் சமூகத்தில் சமமாக பாவிக்கப்பட வேண்டும். பண மதிப்பிழப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. என்பதை, அரசு ஏதோ தவறு செய்துவிட்டதாக செய்ததாக நினைக்க வேண்டாம். திட்டமிட்டு தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களின் முதுகெலும்பை ஒடிக்க செய்த சதி செயல் இது. ஏழைகளின் வறுமை பற்றி நரேந்திரமோடிக்கு தெரியாது. ஆனால் அது நமக்கு தெரியும். இந்தியாவின் பொருளாதாரம் படுபாதாளத்தில் உள்ளது.

இந்தியாவில் உள்ள வங்கி பணத்தை எல்லாம் 10-15 முதலாளிகளுக்கு கொடுத்துள்ளார். அவர்கள் திரும்ப செலுத்துவதில்லை. அதேசமயம் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொடுத்த கடனை திரும்ப செலுத்த சொல்கிறார்கள். காங்கிரஸ் அரசு அமையும்போது, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வேண்டியதை செய்வோம். அதில் ஓய்வூதியம் என்பது பெரும்பங்காக இருக்கும். அனைத்து வகை ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும்.காங்கிரசின் கொள்கை என்பது வறுமையை ஒழிப்பதே. வங்கிகளில் இருந்து ஏழைகளுக்கும், சிறு தொழில் முனைவோருக்கும் உதவிகள் கிடைக்க வேண்டும். பணமதிப்பிழப்பு என்பது திட்டமிடப்பட்டு தொழிலாளர்களை நசுக்க செய்யப்பட்டது. டெல்லியில் உள்ள விவசாயிகள் மோடியை வெளியே வரவிடாமல் செய்துவிட்டனர்.  அவர் ஏழைகளின் சக்தியை தெரிந்துகொள்ளவில்லை. அவர்களின் சக்தியை அவர் தெரிந்துகொள்ள வைக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் நோக்கம் பணப்பலன்கள் நேரடியாக மக்களை சென்றடைவதே. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமையும் பட்சத்தில் அதை சாத்தியமாக்குவோம். ஒரு நாட்டின் தலைவர் அரவணைத்து செல்பவராக இருக்க வேண்டும். அகம்பாவம் கொண்டவராக இருந்தால், நாடு எப்படி வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ்  தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், ஐ.என்.டி.சி.யு. மாநில செயலாளர்  ஜெகநாதன், எல்.பி.எப். மாநில துணைத் தலைவர் கோவிந்தசாமி, சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரெங்கராஜ், எச்.எம்.எஸ். மாநில செயலாளர் ராஜாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : country ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!