பிஏபி கிளை வாய்க்கால் பிரச்னை உண்ணாவிரதத்தை கைவிடுவதாக போராட்டக் குழு அறிவிப்பு

காங்கயம், ஜன.24:வெள்ளகோவில் பிஏபி கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி காங்கயத்தில் விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர், இந்நிலையில், 5ம் நாளான நேற்று இந்தப் போராட்டத்தைக் கைவிடுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்தனர். திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கோவை சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு காங்கயம்-வெள்ளகோவில் நீர் பாதுகாப்புக்குழு சார்பில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தின் (பிஏபி) வெள்ளகோவில் கிளை வாய்க்காலில் பாசனத்துக்கு சட்டப்படி தண்ணீர் விட வலியுறுத்தி தொடர்ந்து 5 நாள்களாக 26 விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டதன் படி, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதாக போராட்டக் குழுவின் தலைவர் வேலுச்சாமி நேற்று இரவு 9 மணியளவில் உணாவிரதப் போராட்ட பந்தலில் அறிவித்தார்.

மேலும், இப்பிரச்னை தொடர்பாக திங்கள்கிழமை சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசுவதற்கு போராட்டக் குழுவினருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, உண்ணாவிரதம் இருந்த 26 விவசாயிகளுக்கும் பழச்சாறு கொடுத்து, உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது. இதில் காங்கயம் அதிமுக ஒன்றிய செயலர் நடராஜ், வெள்ளகோவில் ஒன்றியக்குழு தலைவர் சுதர்சனம், காங்கயம் வட்டாட்சியர் சிவகாமி, காங்கயம் டி.எஸ்.பி., தனராசு, ஆய்வாளர் மணிகண்டன், திருப்பூர் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவர் வெங்கு ஜி.மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>