ராகுல்காந்தி இன்று ஈரோடு மாவட்டம் வருகை

ஈரோடு,  ஜன. 24:  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று ஈரோடு  மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அகில  இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கு  மண்டலத்திற்குட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய  மாவட்டங்களில் நேற்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இன்று (24ம் தேதி) காலை 10 மணிக்கு ஈரோடு  மாவட்டத்திற்கு வருகை தர உள்ள ராகுல்காந்திக்கு மாவட்ட எல்லையான  ஊத்துக்குளியில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், வரவேற்பு  அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து பெருந்துறையில் பொதுமக்களை  சந்திக்கிறார். பிறகு 11 மணியளவில் ஈரோட்டிற்கு வருகை தரும்  ராகுல்காந்திக்கு தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில், அரசு மருத்துவமனை  ரவுண்டானா அருகில் வரவேற்பு அளிக்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்து அங்குள்ள  காமராஜர், ஈவிகேஎஸ்., சம்பத் சிலைகளுக்கும், மாநகராட்சி வளாகத்தில் உள்ள  மகாத்மா காந்தி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.  

இதையடுத்து பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள தந்தை பெரியார் மற்றும்  முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின்  சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து  அரச்சலூர் அருகே உள்ள ஓடாநிலை சென்று தீரன்சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்த  பின், அங்கு நெசவாளர்களை சந்தித்து 30 நிமிடங்கள் கலந்துரையாடுகிறார்.  நெசவாளர்களுடன் அமர்ந்து மதிய உணவு முடித்துவிட்டு 3 மணிக்கு அங்கிருந்து  திருப்பூர் மாவட்டம் காங்கயம் புறப்பட்டு செல்கிறார்.  ஈரோடு  மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ராகுல்காந்திக்கு  காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஈ.பி. ரவி, சரவணன்,மக்கள் ராஜன், மண்டல தலைவர் ஜாபர் சாதிக் ,விவசாய பிரிவு  மாவட்ட தலைவர் பெரியசாமி, சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஸ், மாவட்ட துணைதலைவர் ஞானசேகரன்,முன்னாள் மாவட்ட தலைவர் காந்தி , மாநில நிர்வாகிகள், வட்டார, நகர நிர்வாகிகள்  உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல்காந்தி  வருகையையொட்டி மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை  நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

ராகுல் காந்தியை வரவேற்க அணிதிரண்டு வாரீர்

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் ஜெ.சுரேஷ் கூறியுள்ளதாவது: 70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் நேரு, இந்திரா, ராஜீவ் என மூன்று தலைமுறைக்கு மேல் இந்தியாவை ஆண்ட குடும்பத்தில் பிறந்தவர் ராகுல் காந்தி. 2009ம் ஆண்டு முன்னின்று நடத்திய தேர்தல் பிரச்சாரத்தால் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.காங்கிரஸ் கட்சியில் சிந்தனையாளர் குழுவை உருவாக்கியும், நாடு முழுவதும் உட்கட்சி தேர்தல் நடத்தியும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இந்திய மக்களுக்கு சேவை செய்வதே தன் முழுநேர கடமை என்பதை உணர்ந்து செயலாற்றுபவர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்று திறம்பட செயலாற்றியவர். அடித்தட்டு மக்களிடம் மிகவும் நெருங்கி பழகக்கூடியவர். கிராம மக்களிடம் நல்ல தொடர்பை ஏற்படுத்தி வைத்திருப்பவர். காங்கிரஸ் கட்சிக்கு சிறந்த ஜனநாயக பண்பை மேற்கொண்டு வருபவர். மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சரவையில் சேரும் வாய்ப்பை ஏற்க மறுத்தவர். இன்று அடித்தளம் வரை சென்று கட்சியை பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். இன்று ஈரோடு மாவட்டத்திற்கு வரும் நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இளம் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் சிறுபான்மை பிரிவை சார்ந்த நிர்வாகிகள் அனைவரையும் அணிதிரண்டு வருமாறு அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>