மாவட்டத்தில் 1210 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு, ஜன. 24: ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் 1210 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் முன் களப்பணியாளர்களான டாக்டர், நர்ஸ், மருத்துவமனை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. ஈரோடு அரசு மருத்துவமனை, ஈரோடு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, பவானி மற்றும் கோபி அரசு மருத்துவமனை, சிறுவலுார் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 5 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. முதல் நாளில் 99 பேர் மட்டும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

ஆரம்பத்தில் தடுப்பூசி மீதான அச்சம் இருந்ததால், தடுப்பூசி போட்டுக் கொள்வோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது நிலைமை சரியாகி தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருவதாகவும், நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 1,210 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் முன் களப்பணியாளர்கள் என்று கண்டறியப்பட்டுள்ள 13,200 பேருக்கு தடுப்பூசி போடும் வகையில், மருந்துகள் தயார் நிலையில் உள்ளதாகவும், கூடுதலாக 20 சதவீதம் இருப்பில் உள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: