×

காரில் வந்து ஆடு திருடும் 7 பேர் கும்பல் கைது

சத்தியமங்கலம், ஜன.24: புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள கொண்டையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னப்பன் (70). இவர் தனது தோட்டத்தில் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தனது ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு தூங்கச் சென்றார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்த விவசாயி பொன்னப்பன்பட்டியிலிருந்து ஆடு ஒன்றை திருடிக்கொண்டு வாலிபர்கள் பைக்கில் கடத்தி செல்வதை கண்டு சத்தமிட்டார். அவரது சத்தம் கேட்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் சாலையில் பைக்கில் சென்ற இருவரை மடக்கி பிடித்தபோது அதில் ஒருவன் தப்பி ஓடிவிட்டான். மற்றொருவனை பிடித்த பொதுமக்கள் புஞ்சைபுளியம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கோபி அடுத்துள்ள கொங்கர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் (18) என்பது தெரியவந்தது. இவரது நண்பர்களான உக்கரம் காளிகுளம் பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி (28), காராப்பாடியை சேர்ந்த ரமேஷ் (22), தினேஷ் (21), கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (19) பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த சார்லஸ் மிராண்டா (22) கரண் (20) ஆகிய 7 பேர் சேர்ந்து விவசாய தோட்டங்களில் ஆடுகளை திருடி கார், பைக்குகளில் கடத்தி காளி குளம்  சிரஞ்சீவி நடத்திவரும் மட்டன் கடையில் ஆடுகளை வெட்டி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு 7 பேர் மீது வழக்குப்பதிந்து கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் உயிரிழப்பு