வங்கி கடன் வாங்கி தருவதாக 5.50 லட்ச ரூபாய் மோசடி ஈரோடு வாலிபர் கைது

திண்டுக்கல், ஜன. 24: வேடசந்தூர், எரியோட்டில் வங்கியில் கடன் வாங்கி தருவதாக ரூ.5.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஈரோடு வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேடசந்தூர், எரியோடு பகுதியில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஒருவர் துண்டுபிரசுரங்களை விநியோகித்தார். அந்த துண்டு பிரசுரத்தில், வங்கி கடன் பெற்று தரப்படும் என குறிப்பிடப்பட்ருந்தது. மேலும் ஒரு செல்போன் எண்ணும் இருந்தது. இதனை பார்த்த வேடசந்தூர், எரியோட்டை சேர்ந்த பூவண்ணகிருஷ்ணன்(45) உள்ளிட்ட 7 பேர் அந்த எண்ணில் தொடர்பு கொண்டனர்.

எதிர்முனையில் பேசியவர், தான் குறிப்பிட்ட வங்கிகளில் கடன் பிரிவு முகவராக இருப்பதாகவும், அந்த வங்கிகளில் குறைந்த வட்டியில் தன்னால் எளிதில் கடன் பெற்று தரமுடியும் என்றும், இதற்கு வங்கி மேலாளருக்கு கமிஷன் கொடுக்க வேண்டுமென ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய பூவண்ணகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேரும் கட்டணத்தை செலுத்த ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் அருகே 7 பேரையும் வரவழைத்த மர்மநபர், அவர்களிடமிருந்து தலா ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என மொத்தம் ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்தை கமிஷனாக பெற்று கொண்டார்.

பின்னர் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் அவர்களுக்கு கடன் பெற்று தருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அந்த நபர் கூறியபடி கடன் பெற்று தரவில்லை. இதையடுத்து அவரது செல்போனை தொடர்பு கொள்ள முயன்றபோது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த 7 பேரும், திண்டுக்கல் வடக்கு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ மகேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு எஸ்ஐக்கள் வீரபாண்டியன், நல்லதம்பி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மோசடியில் ஈடுபட்டது ஈரோடு மாவட்டம், நாடார் மேட்டை சேர்ந்த சோமசுந்தரம் மகன் பிரகாஷ் (33) என்பது தெரிந்தது. பிரகாஷை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் மற்றும் மோசடிக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

Related Stories: