இலவச திட்ட பயனாளிகளை தேர்வு செய்ய அதிகாரம் வேண்டும் ஊராட்சிமன்ற தலைவர்கள் வலியுறுத்தல்

தேனி, ஜன.24: அரசின் இலவச திட்ட பயனாளிகளை தேர்வு செய்ய ஊராட்சிக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும் என மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேனி மாவட்ட அளவிலான அனைத்து ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் வீரபாண்டியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் முத்துவேல் தலைமை வகித்தார். தலைவர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சின்னப்பாண்டி பேசினார். இக்கூட்டத்தின் போது பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஊராட்சியில் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்க வேண்டும்.

ஊராட்சி மன்றங்கள் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஊராட்சி மன்ற பணி நியமன குழுவுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அரசின் இலவச திட்ட பயனாளிகளை தேர்வு செய்ய ஊராட்சிக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். ஊராட்சி மன்ற குழுக்கூட்டம் நடக்கும்போது மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இருக்கை படித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டமைப்பின் மாவட்ட துணைத் தலைவர்கள் சாந்திகண்ணையா, ஜெயமணி, துணைச்செயலாளர்கள் பாண்டியம்மாள், லதாரஞ்சித் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: